புது தில்லி:
வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபடுவது உள்ளிட்ட பொருளாதார மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்பவர்களின் சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை இன்று ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய மசோதா வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிமுகப் படுத்தப்படும்.
பொதுத் துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிக் கடன்களை வரன்முறை இன்றி அள்ளி விட்டதில், திடீரென்று எகிறிய ரியல் எஸ்டேட் வியாபாரம் துவங்கி பல தொழில்களும் செயற்கையாக வளர்வது போல் ஒரு தோற்றம் பெற்றன. இதனை சாக்காக வைத்து தொழிலதிபர்கள் என்ற போர்வையில் சிலர் கோடிக்கணக்கில் வங்கிகளில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களைப் பெற்றனர். ஆனால் அவை வங்கிகளுக்குத் திரும்பாமல், மோசடிப் பேர்வழிகளால் ஏய்க்கப்பட்டு வருகின்றனர். அண்மைக் காலத்தில், எஸ்பிஐ வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்த விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்த நீரவ் மோடி என சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விடுகின்றனர். அவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப் பட்டு விசாரணைக்கு நாட்டுக்கு அழைத்தால், இந்தியா திரும்ப மறுக்கின்றனர்.
இவர்களைக் கைது செய்வதிலும், சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்வதிலும் சிக்கல்கள் பல நீடிக்கிறது. எனவே இவ்வாறு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்வது தொடர்பான புதிய சட்ட மசோதா கொண்டு வரலாம் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுவில் ஆலோசிக்கப்பட்டது. இது அடுத்து வரும் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அதாவது மார்ச் 5-ஆம் தேதி தொடங்கும் 2-ஆவது பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தப் புதிய சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவதன் மூலம் பொருளாதார மோசடி செய்த குற்றவாளிகளின் அனைத்து சொத்துக்களும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவரது பினாமி சொத்துக்களையும் எளிதில் பறிமுதல் செய்ய முடியும். ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்யும் அத்தனை பேரின் மீதும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளின் சொத்துக்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் பறிமுதல் செய்ய முடியும். அதுகுறித்து மத்திய அரசு சம்பந்தப்பட்ட நாட்டின் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் மிகப் பெரிய பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும்.. என்று கூறினார்.
முன்னதாக, நாட்டை விட்டு குடும்பத்துடன் ஓடிப் போன நீரவ் மோடி, தாம் இந்தியாவுக்குத் திரும்ப இயலாது என்று பகிரங்கமாக அறிவித்து கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.



