‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத்’ எனும் பொதுமக்களுக்கான சுகாதார நலத் திட்டத்தை, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் என்று கூறப்பட்டது. இதுவரை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், இத்திட்டத்தில் மக்கள் பயனடைந்துள்ளனர்.
முதலில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது சமூக பொருளாதார வரம்பு நிலைகளைக் கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பயனடையும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்’ என்று, கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், 6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும்.
‘சமூக – பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும். தகுதியான மூத்த குடிமக்களுக்கு புதிய தனித்துவமான ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். தனியார் காப்பீட்டு திட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய அரசின் பிற சுகாதாரத் திட்டங்களில் பலன்களை பெறும் மூத்த குடிமக்கள், ஏற்கனவே உள்ள திட்டத்தில் தொடரலாம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.