ஹிந்துக்கள் மிகவும் புனிதமாகப் போற்றப்பட்டு வரும் திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த ஆய்வறிக்கையும் அதனைத் தொடர்ந்து வெளியாகும் செய்திகளும் விவாதங்களும் ஹிந்துக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, திருப்பதி பெருமாளுக்கு விரதம் இருந்து வரும் புரட்டாசி மாதத்தின் தொடக்கத்தில் இத்தகைய செய்தி வெளியாகி இருப்பது பக்தர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி வேங்கடாசலபதி கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். வெகு நாட்களுக்கு முன்பே தரிசன டிக்கெட் பதிவு செய்து வரிசையில் காத்திருந்து திருப்பதி பெருமாளை வணங்கி செல்லும் பக்தர்கள் அனைவருமே தவறாமல் இங்கு விநியோகம் செய்யப்படும் பிரசாத லட்டுவையும் வாங்கிச் செல்கிறார்கள். நாளொன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் வரை இங்கே பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதும், திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் மத்தியில் இருக்கும் தேவை காரணமாக, கள்ளச் சந்தையில் திருப்பதி லட்டு கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதும் பழக்கமாகி போன ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான், தற்போதைய ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளில் கொழுப்பு கலந்திருப்பதாக தெரியவந்தது குறித்து அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததற்காக முந்தைய முதல் அமைச்சர் ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது பேச்சு திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை மட்டுமல்லாது ஹிந்து ஆன்மீக உணர்வாளர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு இவ்வாறு புகார் கிளப்பிய மறுநாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. அதில், மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் திருப்பதி லட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, ‘முந்தைய ஆட்சியில் இப்படி அநியாயம் செய்தனர். நாங்கள் அதை தரமானதாக மாற்றி நெய் மட்டுமே லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டார் சந்திரபாபு நாயுடு.
தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடரமண ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாதிரி குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது பெரியவந்துள்ளது. அந்த நெய்யில், மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கூறியபோது, கடந்த இரு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் தேவை என்று கூறி டெண்டர் விடப்பட்டது. டெண்டரின் பேரில் அந்த நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்தது. அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது. இதன் பேரில் விசாரணை நடத்தி நெய் கொள்முதல் நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.
மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாக பார்க்கப்படும் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பாக எழுந்துள்ள நிலையில், ஆந்திர முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அக்கட்சியின் சார்பில் ஒய்.வி.சுப்பா ரெட்டி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கு தேசம் கட்சி அரசியல் லாபத்திற்காக பொய் சொல்கிறது. திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அவமதித்துள்ளார். லட்டு பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்க சந்திரபாபு நாயுடு தயங்கமாட்டார் என்பதற்கு இதுவே அத்தாட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியும் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஹிந்துக்கள் வழிபடும் தெய்வத்தின் புனிதத்தை நாசம் செய்யும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளில் அரசியல் கோணங்கள் இல்லை. யார் பொறுப்பு என்று கண்டுபிடியுங்கள்” என்று கூறினார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு கலப்படம் குறித்து, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சமூகத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் “சநாதன தர்மத்தை எந்த வகையில் இழிவுபடுத்தினாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்போம். தேச அளவில் சநாதன தர்ம பாதுகாப்பு அமைப்பை (Sanatana Dharma Rakshana Board) உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமலை திருப்பதி லட்டு விவகாரம் இப்போது ஆந்திர அரசியல் மட்டத்திலும் நாடு முழுவதும் ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் அலசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பதி வேங்கடசலபதிக்காக விரதம் இருந்து வரும் புரட்டாசி மாத தொடக்கத்தில் இந்த உபகாரம் வெளியானது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி நிறுவனம் தாங்கள் கடந்த நான்கு வருடங்களாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என்று கூறி ஒதுங்கி விட்டது. ஆய்வறிக்கைகளின்படி தமிழகத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நிறுவனம் என்றும் திண்டுக்கல்லை சேர்ந்த நிறுவனம் என்றும் குறிப்பிடப்பட்டு அவற்றின் மூலம் தான் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக தளங்களில் வெளியாகும் வெவ்வேறு தகவல்களால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.