டோலி.. சபரிமலை சென்றவர்கள் அனைவருக்கும் பரிச்சயமானதுதான் டோலி..டோலி…என்கின்ற வார்த்தை.
பம்பை வரை வாகனங்களில் வருபவர்கள் யாராக இருந்தாலும் ஐந்து கிலோ மீட்டர் துாரத்தில் ,மலை உயரத்தில் உள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு நடந்து சென்றுதான் சுவாமி ஐயப்பனை தரிசிக்க வேண்டு ம்.
அதிலும் நீலிமலை மற்றும் அப்பச்சி மேடு ஆகிய பகுதிகள் கிட்டத்தட்ட செங்குத்தாக ஏறுவது போல இருக்கும், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது நிறைய மூச்சு வாங்கும்.
நல்ல உடல் நிலையில் திடகாத்திரமாக இருப்பவர்களே நின்று நின்று நிறைய ஒய்வு எடுத்தே ஏறுவர். இந்த நிலையில் வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் உடல் நிலை பிரச்னை காரணமாக நடக்க இயலாதவர்கள், எல்லாம் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு உள்ள ஒரே வழி ‛டோலி’தான்.
இரண்டு பக்க கம்புகளால் இணைக்கப்பட்ட பிரம்பு நாற்காலியில் சம்பந்தப்பட்டவர்களை உட்காரவைத்து பம்பை நதிக்கரையில் இருந்து சன்னிதானம் வரை சுமந்து செல்வர், தரிசனம் செய்து முடிந்த பிறகு மீண்டும் சுமந்து வந்து பம்பை நதி அருகே இறக்கிவிடுவதுதான் இவர்களது வேலை, தொழில் எல்லாம்.
மலையேறுபவர்கள் ஒரு பாட்டில் தண்ணீரை சுமந்து கொண்டு ஏறுவதைக்கூட சிரமம் என்று கருதி அடிவாரத்திலேயே தண்ணீர் முழுவதையும் குடித்துவி்ட்டு பாட்டிலை துாக்கி எறிந்துவிட்டு செல்லும் நிலையில் ,கிட்டத்தட்ட நுாறு கிலோ வரையிலான உடல் எடை கொண்ட பக்தர்களை அவர்களது இருமுடி கட்டுகள் உள்ளீட்ட சிறிய சுமைகளுடன் சுமப்பது சாதாரண வேலை இல்லை உடம்பெங்கும் உயிர் போவது போல வலிக்கும்.
வேர்வை கொட்டும் என்பதால் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருப்பர் போவதற்கு இரண்டு மணி நேரமும் வருவதற்கு இரண்டு மணி நேரமும் எடுத்துக் கொள்வர், இடையிடையே பத்து நிமிடம் டோலியை இறக்கிவைத்துவி்ட்டு ‛நாராங்க ஜூஸ்’ என்று சொல்லக்கூடிய எலுமிச்சைப் பழச்சாறு அருந்தி தங்கள் களைப்பை போக்கிக் கொள்வர்.
கொட்டும் மழையானாலும்,கொளுத்தும் வெயிலானாலும் பக்தர்களை சுமந்து சென்று திரும்புவர், எவ்வளவு கூட்டம் என்றாலும் ‛டோலி டோலி’ என்ற வார்த்தையை கேட்டால் கூட்டம் விலகிவழிவிடும்.
வேர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்க கம்புகளை தலையில் தாங்கியபடி இவர்கள் பக்தர்களை துாக்கி்க் கொண்டு வருவதைப் பார்க்கும் யாருக்குமே மனதில் பரிதாபம் தோன்றும், இவர்கள் மூலமாக ஐயப்பனை தரிசித்தவர்கள் கிழே இறங்கியதும் ஐயப்பனுக்கு அடுத்து கும்பிடுவது இவர்களைத்தான்,
அந்த அளவிற்கு இவர்களது பணி சிரமமானது. இந்த சிரமமான பணியினை பார்ப்பதிலும் போட்டி இருக்கிறது கிட்டத்தட்ட 500 டோலிகள் இருக்கின்றன 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டோலி சுமக்கும் தொழிலாளர்களாக உள்ளனர் இவர்களில் தொன்னுாறு சதவீதத்தினர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். யாரைக்கேட்டாலும் ஊரில் விவசாயம் சரியில்லை குடும்பத்தை காப்பாத்தணும் அதான் இங்க வந்து இந்த வேலையை பார்க்கிறோம் ஆனால் நாங்கள் இந்த வேலையை பார்ப்பது குடும்பத்தினர் பலருக்கு தெரியாது தெரிந்தால் ரத்த கண்ணீர் வடிப்பர்.
இங்கே நாங்கள் தங்குவதற்கு இடம் கிடையாது சரியான சாப்பாடு கிடையாது,கப்ப கஞ்சியை குடித்துவிட்டு கையை தலைக்கு வைத்து கிடைத்த இடத்தில் படுத்துக் கிடப்போம் ‛ஏம்பா டோலி’ என்ற வார்த்தையை எந்த நேரத்தில் கேட்டாலும் அடித்து பிடித்து கிளம்பிவிடுவோம் ஒரு நாளைக்கு ஒருவரையாவது சுமந்து சென்று திரும்ப வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மட்டுமல்ல ஊரில் உள்ள எங்கள் குடும்பத்தினரின் நிலையும் பரிதாபம்தான்.
ஒரு பக்தரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் வசூலித்துக் கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்கியிருக்கிறது 4 பேர் இந்த நான்காயிரம் ரூபாயை பிரித்துக் கொள்வோம் , 62 நாட்கள்தான் எங்களுக்கு வேலையிருக்கும் ஒரு நாளைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலே திருப்திதான் எங்களுக்கே இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் முதல் வாய்ப்பு கூட கிடைக்காதவருக்கு அந்த வாய்ப்பை நாங்களே கொடுத்துவிடுவோம் அவுங்களும் பாவம்ல என்றனர்.
இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும் தொழிலாளர் என்ற எந்த வரம்பிற்குள்ளும் வரமாட்டார்கள் அதற்கான எந்த வசதி வாய்ப்பும் கிடையாது.
தொழிலாளர்களின் அரசாங்கம் என்று சொல்லிக்கொள்ளும் கேரள அரசு இந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக நிம்மதியாக துாங்குவதற்கும் சாப்பிடுவதற்குமாவது ஓரு இடத்தை பம்பையில் ஒதுக்கிதரலாம்.
இவர்களை சுமக்கவைத்த பாவத்திற்கு ஆளாகவிரும்பவில்லை ஆனால் அதற்கான கட்டணமான 4 ஆயிரத்தை வெகுமதியாக தரவிரும்புகிறேன் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர் டோலி துாக்கும் தொழிலாளர்கள் ஒரு அமைப்பை துவக்கினால் அந்த அமைப்பிற்கு இந்த பக்தர்களில் பலர் 4 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்க தயராக உள்ளனர் அதில் உணவு செலவு போன்றவைகளை பகிர்ந்து கொள்ளலாம்,செய்வார்களா?
எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள் விவசாயிகளாகவும் இன்னாள் டோலி தொழிலாளர்களாகவும் உள்ள இவர்களிடம் காதுகொடுத்து இவர்கள் சொல்வதை நம்மூரில் உள்ள விவசாயம் தொடர்பான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கேட்கவேண்டும்.
விவசாயம் பார்க்கமுடியாத வேதனையை, நீரின்றி பயிர்களுடன் தாங்களும் வாடும் கொடுமையை கண்ணீர்மல்க சொல்வர்.இவர்களின் சோகமான சொந்தக்கதையை கேட்டுவிட்டு கரம் நீட்டி இவர்கள் கண்ணீரை துடைக்க முயற்சிக்க வேண்டும் மேலும் இனியும் நம் விவசாயிகள் டோலி தொழிலாளர்களாக மாறாமல் காக்க வேண்டும்..