இந்து சமய அறநிலையத்துறையின் தவறை மூடி மறைத்து பொதுமக்கள் மீது பழிபோடும் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகவேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களை முறையாக பராமரிப்பது, சரியான காலத்தில் குடமுழுக்கு செய்வது உள்ளிட்ட பல அடிப்படை பணிகளைக் கூடச் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை தோல்வியடைந்துவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாபுராஜன்பேட்டை விஜய வரதராஜர் கோவிலை சீரமைக்க 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கூட இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றாததால் தற்போது நீதிமன்றம் இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து உடனே சீரமைப்பு பணியை தொடங்க உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குன்றக்குடி கோவில்யானை இறப்பு,பழனி கோவில் யானை இறப்பு, திருச்செந்தூர் யானை தாக்கி பாகன்கள் இறப்பு என்று தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கையாலாகாத்தனம் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதில் ஒரு படி மேலே போய் ஆளும் கட்சியின் மற்றொரு அமைச்சராகிய பொன்முடி அவர்களும் இந்து சமய அறநிலையத்துறையின் குளறுபடிகளை பொது வெளியில் விமர்சித்துள்ளார்.
ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களோ திட்டமிட்டு சங்கிகள் பொய் பரப்புவதாக பேட்டி கொடுக்கிறார். அமைச்சர் தன் தவறை மறைக்க பொதுமக்கள் மீது குற்றங்களை சுமத்துகிறார்.
தொடர்ந்து நீதிமன்றமும்,பொதுமக்களும் பல வகைகளில் கண்டித்த பிறகும் அறநிலையத்துறையிடம் எவ்வித மாற்றமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை.
எனவே நிர்வாக திறமையற்ற அறநிலையத்துறையின் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் பதவி விலக வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.