வங்கதேசத்தில் இஸ்கான் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டது, அங்கு இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, சின்மய் கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சூறையாடப்பட்டு, சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் மீது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சுமார் 2 ஆயிரம் இந்துக் குடும்பங்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 150க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்து பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்கான் பொதுச்செயலாளர் கைது:
வங்கதேசத்தின் மக்கள்தொகை சுமார் 17 கோடி. இதில் சுமார் 15 கோடி பேர் முஸ்லிம்கள். சுமார் 1.3 கோடி இந்துக்களும், 10 லட்சம் புத்த மதத்தினரும், சுமார் 5 லட்சம் கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்துக்கள் மட்டுமன்றி புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மீதும் கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை கண்டித்து வங்கதேச இஸ்கான் அமைப்பின் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி தலைமையில் வங்கதேசம் முழுவதும் அமைதி வழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற இந்துக்கள் மீது ராணுவம் மற்றும் போலீஸார் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மாச்சாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சின்மயி கிருஷ்ணதாஸ் பிரச்மாச்சாரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
அவரை விடுதலை செய்யக் கோரி சிட்டகாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு பெருந்திரளான இந்துக்கள் திரண்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர் அவர்கள் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சின்மய் கிருஷ்ணதாஸை விடுதலை செய்யக் கோரி வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா கண்டனம்:
இந்தச் சூழலில் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேசத்தில் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. இதை கண்டிக்கிறோம். வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையிர் மீது சமூகவிரோத கும்பல்கள் பல்வேறு தாக்குல்களை நடத்தி வருகின்றன. சிறுபான்மையினரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. இந்து கோயில்கள் சேதமப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் அமைதி வழியில் போராடும் இஸ்கான் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது கைதை எதிர்த்து அமைதி வழியில் போராடும் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறோம். வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள், இதர சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஹெச்.ராஜா கண்டனம்
வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு…
Bangladesh National Party கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்துவதையும், இந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்வதையும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள், இந்துக்களின் வணிக நிறுவனங்கள் மீது தீவைத்து இரையாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை கண்டித்து வந்தவர் ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள்…
இந்துக்கள் அமைதியாகவும், பிரிந்தும் இருந்தால் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே ஒட்டுமொத்த இந்துக்களும் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களும், கொலைவெறி தாக்குதல்களும் உலகின் பார்வைக்கு தெரியவரும் என இந்துக்களை உணர வைத்து லட்சக்கணக்கான இந்துக்கள் வங்க தேசத்தில் ஒன்று திரண்டு வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலையை ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் உருவாக்கினார்.
இந்துக்களிடையே ஒற்றுமையையும், போராடும் குணத்தையும் அவர் உருவாக்கிய காரணத்தால் அவர் மீது ஆத்திரம் கொண்ட வங்கதேச அரசாங்கம் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளது .
ஒருகாலத்தில் பாரதத்தின் ஒரு அங்கமாக இருந்ததே இன்றைய பாகிஸ்தானும் அதிலிருந்து பிரிந்து உருவான வங்கதேசமும். ஆனால் பெருந்தன்மையோடு இஸ்லாமியர்களுக்கு தனிநாடு கொடுத்த இந்துக்களுக்கு அவ்விரு நாடுகளிலும் நிகழ்ந்து வரும் கொடூர சித்ரவதைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரையிலும், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையிலும், இந்துக்கள் அதிகாரத்தில் இருக்கும் வரையிலும் தான் இந்து சமூகத்திற்கும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் முதல் வாழ்வியல் உரிமைகள் வரை பாதுகாப்பாக இருக்கும்.
EK Hai To Safe Hai என பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முழங்குவதும், Patenge To Katenge என உத்தர பிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் முழங்குவதும் வெறும் வார்த்தைகள் அல்ல…
அதை நாம் உறுதியாக, முழுமையாக பின்பற்றுவதில் தான் இந்துக்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
இல்லையேல் இன்று பங்களாதேஷிலுள்ள இந்துக்களுக்கு நிகழ்வது நாளை பாரதத்திலுள்ள இந்துகளுக்கும் நிகழும் சூழ்நிலை உருவாகும்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஸ்வாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் குரல் கொடுப்போம்.
காஸாவுக்காக, பாலஸ்தீனுக்காக, லெபனானுக்காக இங்கு குரல் கொடுத்தவர்கள் வங்கதேசத்தில் ஜிகாதிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வரும் இந்துக்களுக்காக குரல் கொடுப்பார்களா பார்ப்போம்..!!
- H ராஜா
ஜக்கி வாசுதேவ் கண்டனம்
வங்கதேசத்தில், ஹிந்து சமூகத்தினர் எதிர் கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய, இஸ்கான் அமைப்பின் தலைமை துறவியை கைது செய்ததற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சத்குரு வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஒரு ஜனநாயக நாடு எவ்வாறு சிதைந்து மதவாத மற்றும் சர்வாதிகார நாடாக மாறுகிறது என்பதை பார்க்க மோசமானதாக உள்ளது. சுதந்திரமான ஜனநாயகத்தின் மதிப்புகளை புரிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை எந்த விதத்திலும் ஜனநாயக நாடுகளின் வழி அல்ல.
துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு ஜனநாயக கொள்கைகளில் இருந்து விலகிவிட்டது. அனைத்து குடிமக்களுக்கும் தேவையான உரிமைகள் மற்றும் அவரவர் தேவை மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புடன் இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டினை கட்டமைப்பது ஒவ்வொரு வங்கதேச குடிமகனின் பொறுப்பாகும்.