
தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, மதியம் 1.30 மணி அளவில், பாஜக., 11 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. பாஜக., 37 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. இதன் மூலம், 48 – 22 என்ற தொகுதிகளின் அடிப்படையில் பாஜக., முன்னிலை பெற்றிருந்தது.
தில்லியில் 70 சட்டசபைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேசிய அளவில் ‘இண்டி’ கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
இந்தத் தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1998ல் பாஜக.,வின் முதலமைச்சராக இருந்த சுஷ்மா ஜ்வராஜ், வெங்காய விலை உயர்வைக் காரணம் காட்டி எழுந்த தீவிர பிரசாரத்தில் ஆட்சியை இழந்தார். அதன் பின் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் தில்லியில் ஆட்சி அமைத்தது. ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். இந்நிலையில், ஊழல்கள் குறித்து போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்த சமூக சேவகர் அண்ணா ஹஸாரேயுடன் போராட்டத்தில் பங்கேற்ற அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி, காங்கிரஸை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.
2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எவரும் எதிர்பார்க்காத வகையில், பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67ல் வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பின்னாளில் ஊழல்களின் ஒட்டுமொத்தக் கூடாரம் ஆகிவிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், ஆடம்பரத்துக்குப் பெயர் பெற்றவராகிவிட்டார். அவருடைய கட்சியின் முக்கியத் தலைவர்கள், ஓட்டு வங்கி அரசியலுக்காக இஸ்லாமிய பிரிவினைவாத இயக்கங்களின் பின் சென்று, தில்லியில் நடைபெற்ற மதக் கலவரங்களில் பின்னணியில் இருந்தார்கள்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற 2025 தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து, தோல்வியைத் தழுவியுள்ளது. முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
புதுதில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து பாஜக., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பாஜக., வேட்பாளர் பர்வேஷ் வர்மா, 30,088 வாக்குகள் பெற்றார். கேஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்றார். சந்தீப் தீக்ஷித் 4,568 வாக்குகள் பெற்றார். இதன் மூலம், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக., வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.
கடந்த 2013, 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் புதுதில்லி தொகுதியில் 3 முறை களமிறங்கி வெற்றி பெற்று கேஜ்ரிவால் முதல்வரானார். இப்போது 4வது முறையாக அவர் புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் முன்னாள் அரசியல் குரு அண்ணா ஹஸாரே, கேஜ்ரிவாலின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த போது, “ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கை- யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள்தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை. – இதை நான் கேஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்னை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டு விட்டார்” என்று கூறியுள்ளார்.
ஜங்புரா தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பாஜக., சார்பில் தர்விந்தர் சிங்க் மார்வா போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் பாஜக., வேட்பாளர் 38,869 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணீஷ் சிசோடியா 38,184 வாக்குகள் பெற்று, 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்த போதிலும், தற்போதைய முதல்வரான அதிஷி வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அதிஷியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பாஜக., சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் 52154 வாக்குகளைப் பெற்று, 3521 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வெற்றி பெற்றார்.