
பாரதத்தின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடந்த தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ‘இண்டி’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
முன்னதாக, 14வது குடியரசுத் துணைத் தலைவராக கடந்த 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர் தமது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து தேர்தல் நடைபெற்றது. இதற்கு, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணியின் சார்பில் பாஜக., அறிவித்தது. இதை அடுத்து, அவர் அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு கோரினார்.
இரு அவைகளிலும் தங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்ற போதிலும், திமுக., அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி, தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட் பாளராக அறிவித்தது. இதை அடுத்து தேர்தல் நடப்பது உறுதி ஆனது.
திட்டமிட்டப்படி, செப்.9ம் தேதி நாடாளுமன்ற முதல் தளத்தில் உள்ள வசுதா அரங்கில் காலை 10:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக வாக்கினைப் பதிவு செய்தார். பின் ஹிமாச்சலப் பிரதேச வெள்ள பாதிப்பை பார்வையிட அவர் சென்றார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவ்ராஜ் சிங் சௌகான், கிரண் ரிஜிஜு, எல்.முருகன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்ட பாஜக., மற்றும் தம்பிதுரை, சண்முகம், இன்பதுரை, தனபால், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி., தர்மர் உள்ளிட்ட அதிமுக., எம்.பி.,க்கள் உள்பட, தே.ஜ.கூட்டணி எம்பி.,க்கள் வாக்களித்தனர்.
அதுபோல், இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்ஸன் ரெட்டிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் உள்பட கூட்டணிக் கட்சியினர் வாக்களித்தனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு தொடங்கியது. இரு அவைகளிலும் உள்ள மொத்த வாக்குகள் 788. இதில் இரு அவைகளிலும் காலியாக உள்ள 7 இடங்கள் போக, 781 எம்.பி.,க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். பாரத் ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம் ஆகியவை தேர்தலை புறக்கணித்த நிலையில்,மொத்தம் 767 எம்.பி.,க்கள் வாக்களித்தனர். வெற்றிக்கு, 384 வாக்குகள் தேவை என்ற நிலையில், 452 வாக்குகள் பெற்று தேஜ.கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இண்டி கூட்டணியின் பி.சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதை அடுத்து, குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆர்.வெங்கட் ராமனுக்கு (1984 — 1987) அடுத்து குடியரசு துணைத் தலைவரான இரண்டாவது தமிழர் ஆனார், சி.பி.ராதாகிருஷ்ணன். 1957 அக்.20ல் திருப்பூரில் பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ., பட்டதாரியான இவர், 1996தமிழக பா.ஜ., செயலராக இருந்தார். 1998, 1999 ஆகிய வருடங்களில், கோவையில் இருந்து மக்களவை எம்பி., ஆனார். பின்னர் 2003 முதல் 2006 வரை தமிழக பாஜக., தலைவராக இருந்தார். 2016ல் தேசிய கயிறு வாரிய தலைவராக இருந்த இவர், பின்னர் 2023ல் ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஆனார். பின் மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் தற்போது குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேஜ.,கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்பி.,க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறியபோது, தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு மிகவும் ரகசியத்தன்மையுடன் நடந்தது. மேலும், பல எதிர்க்கட்சி எம்பி.,க்களும் தேஜகூ., வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் தங்கள் மனசாட்சியின் குரலைக் கேட்டு வாக்களித்திருப்பதைக் காட்டுகிறது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளித்த அனைத்து தேஜகூ., எம்பி.,க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பி.,க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து: சமூக சேவை, ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவரது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை வலுப்படுத்தி, பார்லி விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று நம்புகிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! – குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்; அரசியலமைப்பு, ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று ஸ்டாலின், குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, ஸ்டாலினை சந்தித்து சி.பி. ராதாகிருஷ்ணன் ஆதரவு கோரியிருந்ததும், தமிழருக்கு திமுக., ஆதரவளிக்க வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. எனினும் திமுக., இண்டி கூட்டணி வேட்பாளருக்கே வாக்களித்தது.
இந்து முன்னணி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவராக சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வானது தமிழகத்திற்குப் பெருமை என்று, இந்து முன்னணி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:
இந்தியாவின் 11ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. இராதா கிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலிலும், பொது வாழ்விலும் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டவர் மேதகு சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள். சிறு வயது முதலே தேசப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அரசுத் துறைகளில் தலைவராகவும், ஆளுநராகவும் படிப்படியாக உயர்ந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றியவர் . அவர் இன்று இந்தியத் திருநாட்டின் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்பது குறித்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.
பாரதத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் தேர்தலில்,மேதகு சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தேசிய அளவில் தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
தமிழகத்தில் வாழ்ந்த முதறிஞர் ராஜாஜி முதல் டாக்டர் அப்துல்கலாம் வரை உயரிய பதவியில் இருந்து பாரதத்திற்கு பெருமை சேர்த்தவர்களின் வரிசையில் இன்று தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்கும் மேதகு சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களும் பெருமை சேர்ப்பார்.
பாரதத்தின் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்கும் மேதகு சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.





