
— பல்பீர் பூஞ்ச்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
வருமான வரித்துறை தன் வரம்பை மீறி செயல்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தலையங்கம் மூலமாக குற்றம் சாட்டியுள்ளது. அது தாங்கி பிடிக்கின்ற அரசு சாரா அமைப்புகள் என்ஜிஓ க்கள் மீதும் அதே குற்றச்சாட்டை வைக்க முடியுமே ? அவற்றில் பல எந்த காரணத்தை சொல்லி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றார்களோ அந்த நோக்கத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களுக்கு அந்த பணத்தை மடை மாற்றி விடவில்லையா ?
ஜனநாயகத்தில் குடிமை சமுதாயத்தின் செயல்பாடுகளையும் கருத்து சுதந்திரத்தையும் வருமான வரித்துறை கட்டுப்படுத்துகிறது என்கிறது அந்த தலையங்கம் . கோமணத்தை தலையில் கட்டிக் கொண்டுள்ளது போல் இருக்கிறது இது. வெளிநாட்டு நிதி உதவி பெறும் பல என் ஜி ஓ க்கள் ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அரசின் முடிவுகளாக , திட்டங்களாக செயல்படுத்தப் படுவதை கெடுக்கின்றன. இது ஜனநாயக வழிமுறைகளை சிதைப்பது ஆகாதா ? சட்ட புத்தகத்தில் நுண்ணிய எழுத்துக்களில் இருப்பதைக் கொண்டு என்ஜிஓ க்கள் குறி வைக்கப்படுகின்றன என்கின்றது அந்த தலையங்கம். இந்த வாதமே துர்நாற்றம் வீசுவதாக இருக்கிறது. சட்டத்தினால் வலியுறுத்தப்படும் நெறிமுறைகள் பின்பற்றியாக வேண்டும்.
என் ஜி ஓ க்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தங்களை அரசு எப்போதும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது என்ற பயம் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது அந்த தலையங்கம். அதாவது வெளிநாட்டு நிதி உதவி பெறும் என் ஜி ஓ க்களை கூர்ந்து கவனிக்க கூடாது என்கிறது அது. ஏன் கண்காணிக்க கூடாது? வெளிநாட்டு நிதி உதவி பெறும் என் ஜி ஓ க்களையும் இதர என்ஜிஓ க்களையும் அரசு வெவ்வேறு விதமாக நடத்த வேண்டும் என்கிறதா இந்தியன் எக்ஸ்பிரஸ்?
கட்சி வேறுபாடுகளை கடந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த என் ஜி ஓ க்களின் செயல்பாடுகளை பற்றி கண்டனம் எழுப்பி உள்ளனர். 2005 இல் நடந்த 18 வது கட்சி மாநாட்டில் சிபிஎம் தலைவர் பிரகாஷ் கராத், அரசுக்கு வெளிநாட்டு நிதி உதவி என்பது ஒரு வகை. அரசு சாரா அமைப்புகள் -என்ஜிஓ- என்கின்ற தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி உதவி என்பது வேறொரு வகை. பல என்ஜிஓ க்களின் செயல்பாடுகளுக்கு ஏராளமாக வெளிநாட்டு நிதி உதவி வருவதைப் பற்றி நம்முடைய கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது. அது போல் மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் நிதி உதவி மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிப்பதற்காகவும் இடதுசாரி இயக்கங்களிடமிருந்து மக்களை விலக்கி வைப்பதற்காகவும் அளிக்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.
1984 ல் கராத் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் , வெளிநாட்டு நிதி உதவி பெறும் எல்லா அமைப்புகள் மீதும் சந்தேக பார்வை வேண்டும். அவற்றின் நோக்கங்கள் , செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும், என்று எழுதியுள்ளார்.
இதுபோன்ற அமைப்புகள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுப்பது அடிப்படை அற்றது என்றும் ‘சதி செய்யும் வெறிகொண்டு அலைபவை’ என்று என்ஜிஓ களை சித்தரிப்பது சரியல்ல என்றும் தலையங்கம் கூறுவது சரிதானா ? இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் ஆழ்ந்த சதி நோக்கத்துடன் அவை செயல்படுவதை 2019 ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு ஆய்வு , இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவின் பொருளாதாரம் வானுயர பறந்து கொண்டிருப்பது ஏன் ? என்ற தலைப்பில் வெளியான ஆய்வு கட்டுரை, அம்பலப்படுத்தி உள்ளது.
அந்த கட்டுரையில், 1985 இல் இந்தியா மற்றும் சீனாவின் தனிநபர் வருமானம் ஒரே மாதிரியாக 293 டாலராக இருந்தது. ஆனால் இப்போது சீனாவின் தனிநபர் வருமானம் 13 ஆயிரம் டாலராகவும் இந்தியா வெறும் 2700 டாலராகவும் இருக்கிறது. 2024 இல் இந்தியாவின் மொத்த உற்பத்தி 4 டிரில்லியன் ஆக இருக்கும் வேளையில் ஏறத்தாழ அதைவிட ஐந்து மடங்கு அதிகமாக 18.5 டிரில்லியன் டாலராக சீனாவின் மொத்த உற்பத்தி உள்ளது.
இரண்டு அண்டை நாடுகள் இடையே ஏன் இந்த பெரிய இடைவெளி ? இரண்டு நாடுகளிலும் கட்டப்பட்ட அணைகளை பற்றிய ஒப்பீடு – ஒன்று இந்தியாவில் கட்டப்பட்டது. மற்றது சீனாவில் கட்டப்பட்டது – இந்தியாவை விட சீனா வேகமாக தாவியதத்திற்கான காரணத்தை விளக்குகிறது. உலகில் மிகப்பெரிய புனல் மின்சக்தி திட்ட அணையான மூன்று ஆழ்ப்பள்ளத்தாக்கு அணையை சீனா 15 ஆண்டுகளில் கட்டியது. அதைவிட மிகச்சிறிய சர்தார் சரோவர் அணையை கட்ட இந்தியாவுக்கு 56 ஆண்டுகளானது . ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்த திட்டத்தினால் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்ட பல தனிநபர்கள் பலனடைந்தனர்.
2012 பிப்ரவரி மாதம் ஒரு அறிவியல் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ‘உதாரணமாக, கூடங்குளத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அணுமின் உற்பத்தி திட்டம் பிரச்சனையில் சிக்கிக் கொண்டது. அதற்கு காரணம் அமெரிக்காவில் உள்ள என் ஜி ஓ க்கள்தான் என்று நான் கருதுகிறேன். நம் நாட்டின் மின் சக்தி உற்பத்தி அதிகரிப்பதை அவை விரும்பவில்லை’, என்று கூறியுள்ளார். எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் இந்தியாவின் திட்டத்தில் அமெரிக்க என் ஜி ஓ க்களுக்கு என்ன நாட்டம்? ஏன் அந்த திட்டத்தை எதிர்க்க நிதி உதவி செய்தன ?
அண்மையில் , சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் சீன எல்லையில் உள்ள சாலைகளை 10 மீட்டருக்கு அகலப்படுத்த மோடி அரசு உச்சநீதிமன்றத்தின் அனுமதியை கோரியது . சிட்டிசன்ஸ் ஃபார் கிரீன் டூன் என்ற என் ஜி ஓ அந்த திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சீன நாட்டு எல்லையில் சீன அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான நடவடிக்கைகளை பற்றிய விவரமான அறிக்கையை மத்திய அரசு சீல் இடப்பட்ட உறையிலிட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் பிறகு உச்ச நீதிமன்றம் சாலை விரிவாக்கத்திற்கு சார்தாம் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. தீர்ப்பு அளித்த போது, பாதுகாப்பு படையினரின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளைப் பற்றி இந்த நீதிமன்றத்திற்கு இரண்டாவது பார்வையில்லை…. (அதாவது எல்லையோரங்களில் சாலை கட்டமைப்பு அவசியம்), என்று தன் கருத்தை தெரிவித்திருந்தது.
திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள விழுஞ்சியம் சர்வதேச துறைமுக திட்டம் வந்த போது உள்ளூர் மீனவர்கள் மிகப்பெரிய அளவில் அதை எதிர்த்தனர். 2022 ஆண்டு 23 தேதி கேரளா சட்டமன்றத்தில் மாநில முதல்வர் பினராய் விஜயன், இப்போது நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளூர் மீனவர்களால் தன்னெழுச்சியாக நடத்தப்படுவதாக கருத முடியவில்லை. சில பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை பார்க்கும் போது அவை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்றே கருத வேண்டி உள்ளது, என்று குறிப்பிட்டார்.
குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கு எதிர்ப்பு, கூடங்குளத்தில் அணு மின் உலைகள் நிறுவ எதிர்ப்பு, தமிழ்நாட்டில் காப்பர் உற்பத்தி ஆலையை மூட நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள், கேரளாவில் துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், உத்தரகாண்டில் சார்தாம் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு விஷயம் பொதுவாக உள்ளது. இவை எதுவும் தன் எழுச்சியான எதிர்ப்புகள் அல்ல. மாறாக பினராய் விஜயன் சொன்னது போல், ‘திட்டமிட்டு எழுப்பப் படுபவை’. வெளிநாட்டு நிதி உதவி பெறும் என் ஜி ஓ க்களால் எதிர்க்கப்படும் திட்டங்களை பட்டியலிட்டால் அது மேலும் விரிவாகிக் கொண்டே போகும்.
மத்திய புள்ளியியல் அமைப்பின் அறிக்கையின்படி நம் நாட்டில் 30 லட்சம் என்ஜிஓ க்கள் இருக்கின்றன. நாட்டிலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட இது இரண்டு மடங்கு அதிகம் ! உலகிலேயே மிகப்பெரிய பள்ளி கல்வி திட்டத்தைக் கொண்ட இந்தியாவில் 14.89 லட்சம் பள்ளிகள் உள்ளன.
2023 அக்டோபர் 14 தேதி நிலவரம் படி வெளிநாட்டு நிதியுதவி பெற பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ க்களின் எண்ணிக்கை 16,686. 2017 – 18 ஆண்டு முதல் 2021- 22 ஆண்டு வரை வெளிநாட்டு நிதி உதவி பெற பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ களுக்கு 88,882 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இந்திய அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகையை வெளிநாட்டினர் ஏன் செலவிடுகிறார்கள்? ஓசி சோறு என்பது இல்லை, என்ற சொலவடையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
நவீன யுத்தங்கள் எல்லையில் மட்டுமே நடப்பதில்லை. போலிகள் மூலமாக புதிய காலனித்துவம் செயல்படுகிறது. எதிரிகளை கண்காணிக்கும் போது நம்முடனே இருக்கும் எதிரிகளை கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் அமைப்பின் முன்னாள் தலைவர்.





