
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தில் தாணுமாலயாமூர்த்தி கோயில் தெப்பக்குளம் உள் சுற்று சுவர் சரிந்து விழுந்தது .இதனால் இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் உள்ளூர் மக்கள் பதட்டமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தில் உலக பிரசித்தி பெற்ற சிவன் ஹரி பிரம்மா மூவரும் இணைந்து காட்சி தரும் தாணுமாலயாமூர்த்தி கோயில் உள்ளது.இக்கோயிலை ஒட்டியுள்ள தெப்பக்குளத்தில் உள்ள சுற்று சுவரில் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.இதனால் பரபரப்பு நிலவுகிறது. குளத்தில் ஆழமாக மண் எடுப்பதாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மதில் சுவர்கள் வலுவிழந்து இடிந்து வருகின்றன.
மதில் பல இடங்களில் பிளவுகள் தோன்றி, பெரிய கற்கள் கீழே விழத் தொடங்கியதை கண்ட மக்கள் பதட்டமடைந்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்து, உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சுசீந்திரம் தெப்பக்குளம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தி யுள்ளார்.
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயர் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறும் தூர் வாரும் பணிகள் முறையாக நடைபெறாததால், பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. தொடர்ந்து மழை நீடித்தால் அருகிலுள்ள குடியிருப்போர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, அரசு போர்கால அடிப்படையில் தூர் வாரும் பணிகளையும், சுவர் சீரமைப்பையும் உடனடியாக தொடங்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (13.11.2025) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அவர், தூர் வாருதலில் சரியான திட்டமிடல் இல்லை என்றும், இரவு நேரங்களில் கல் மற்றும் வண்டல் மண் எடுத்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டது, எவ்வளவு மண் மற்றும் பாறைகள் எடுக்கப்பட்டன, சுற்றுச்சுவர் ஏன் இடிந்தது போன்ற விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படையாக விளக்க வேண்டும் என அவர் கூறினார்.
ஒரு மாதத்தில் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா வர உள்ளதால், பொறியாளர்களை கொண்டு புதிய சுற்றுச்சுவர் திட்டம் தயாரித்து உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்றும், தவறுகள் செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மழை பெய்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அரசு மற்றும் அறநிலையத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெப்பக்குளத்தின் பிற சுற்றுச்சுவர்களையும் பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.





