December 2, 2025, 2:32 PM
23.8 C
Chennai

கலாசாரம் காக்கும் காசி தமிழ்ச் சங்கமம்!

manadhinkural
#image_title

மனதின் குரல் (128ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள்: 30-11-2025
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

முத்தான மூன்று நிகழ்வுகள்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலுக்கு மீண்டும் உங்களை வரவேற்கிறேன்.  நவம்பர் மாதம், பல உத்வேகங்களை நமக்குக் கொண்டு வந்திருக்கிறது, சில நாட்கள் முன்பாகத் தான், நவம்பர் மாதம் 26ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்ட தினத்தன்று நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, நாடு முழுவதிலும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டன.  நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று அயோத்தியின் இராமர் கோயிலில் தர்மக்கொடி ஏற்றப்பட்டது.  இந்த நாளன்று தான் குருக்ஷேத்திரத்தின் ஜோதிசரிலே பாஞ்சஜன்ய நினைவிடம் மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. 

வானத்தை நோக்கிய பார்வை

நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நான் ஹைதராபதிலே, உலகின் மிகப் பெரிய எஞ்ஜின் எம்.ஆர்.ஓ. வசதியைத் தொடக்கி வைத்தேன்.  அதாவது விமானங்களைப் பராமரித்து, பழுதுபார்த்து, செப்பனிடும் துறையில் பாரதம் இந்தப் பெரிய அடியெடுப்பை எடுத்திருக்கிறது.  கடந்த வாரங்களில் மும்பையிலே, ஒரு நிகழ்ச்சியின் போது ஐ.என்.எஸ் மாஹே கப்பல் இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டது.  அதே போல, கடந்த வாரத்தில் பாரதத்தின் விண்வெளிச் சூழலமைப்புக்கு ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகம் ஒரு தளமமைத்துக் கொடுத்தது.  இது பாரதத்தின் புதிய எண்ணம், புதுமைகள் படைத்தல், இளைஞர்களின் சக்தி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

உயரப் பறக்கும் அன்னக்கொடி

நண்பர்களே, வேளாண்துறையிலும் கூட, தேசம் புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது.  பாரதம் 357 மில்லியன் டன் உணவுப் பொருட்களோடு கூடவே ஒரு வரலாற்றுச் சிறப்பான பதிவையும் ஏற்படுத்தியிருக்கிறது.  357 மில்லியன் டன்!!  பத்தாண்டுகள் முன்பான தரவுகளோடு ஒப்பிடும்போது, பாரதத்தின் உணவுப்பொருள் உற்பத்தி 100 மில்லியன் டன் மேலும் அதிகரித்திருக்கிறது.  விளையாட்டுக்கள் உலகிலேயும் கூட பாரதத்தின் கொடி உயரப் பறக்கவிடப்பட்டது.  சில நாட்களுக்கு முன்பு பாரதம் காமன்வெல்த் நாடுகளுக்கான விளையாட்டுக்களை நடத்தும் அறிவிப்பும் வெளியானது.  இந்தச் சாதனைகள் தேசத்திற்குச் சொந்தமானவை, நாட்டுமக்களின் சொத்து.  தேச மக்களின் இப்படிப்பட்ட சாதனைகள், மக்களின் சமூக முன்னெடுப்புகள் ஆகியவற்றை அனைவருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைப்பதற்கு, மனதின் குரல் என்ற மேடை மிகச் சிறப்பான ஒன்றாகும்.

தோல்வியே வெற்றிக்கான அடித்தளம்!

நண்பர்களே, மனதிலே முனைப்பு இருந்தால், சமூக சக்தியின் துணையோடு ஒரு குழுவாகச் செயலாற்றுவதிலே நம்பிக்கை இருந்தால், தோல்வியடைந்தாலும் மீண்டெழுந்து முயலும் துணிவு இருந்தால், மிகக் கடினமான காரியமும் கூட வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.   நீங்கள் அப்படிப்பட்ட காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள்…. அப்போது செயற்கைக்கோள் இருக்கவில்லை, ஜி.பி.எஸ். முறை இருக்கவில்லை, திசையறிதலுக்கான எந்த வசதிகளும் இருக்கவில்லை.  அப்போதும் கூட நமது கடலோடிகள் பெரியபெரிய கலன்களில் கடல் மீது பயணித்தார்கள், செல்லத் தீர்மானித்த இடங்களுக்குச் சென்றார்கள்.  இப்போது கடல்களையெல்லாம் தாண்டி, விண்வெளியின் கணக்கே இல்லாத உயரங்களை உலக நாடுகள் அளந்து கொண்டிருக்கிறார்கள்.  அங்கேயும் கூட அதே பழைய சவால்கள் தாம் – ஜி.பி.எஸ். முறை இல்லை, தகவல்பரிமாற்றச் சாதனங்கள் இல்லை, அப்படியென்றால் நாம் எப்படி முன்னேற முடியும்?

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்த ஒரு காணொளி என் கவனத்தைக் கவர்ந்தது.   இந்தக் காணொளி, இஸ்ரோ அமைப்பின் ஒரு வித்தியாசமான ட்ரோன் போட்டி தொடர்பானது.  நமது தேசத்தின் இளைஞர்கள், குறிப்பாக நமது ஜென் – Zயைச் சேர்ந்த இளைஞர்கள் செவ்வாய்க் கோள் போன்ற இடங்களில் ட்ரோனை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிப்பது அந்தக் காணொளியில் காண முடிந்தது.   ட்ரோன்கள் எழும்பின, சில கணங்கள் நிதானமாகப் பறந்தன, பிறகு திடீரென்று நிலத்தில் வந்து விழுந்தன.  ஏன் என்று தெரியுமா?  ஏனென்றால் எழும்பிய அந்த ட்ரோன்களுக்கு ஜி.பி.எஸ். அமைப்பின் துணை இருக்கவில்லை.  செவ்வாய் கிரகத்திலே ஜி.பி.எஸ். சாத்தியமில்லை என்பதால், ட்ரோன்களுக்கு வெளியிலிருந்து எந்த சுட்டுதலோ, வழிகாட்டுதலோ கிடைக்கவில்லை.  ட்ரோன்கள் அவற்றுக்குள்ளிருந்த கேமிரா மற்றும் மென்பொருள் துணையோடு பறக்க வேண்டியிருந்தது.  அந்தச் சின்னஞ்சிறிய ட்ரோன்கள் நிலத்தின் வடிவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், உயரங்களை அளக்க வேண்டும், தடைகளை அடையாளம் காண வேண்டும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான பாதையைத் தாமே தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஆகையால் தான் அவை ஒன்றன்பின் ஒன்றாக கீழே விழுந்து கொண்டிருந்தன.

நண்பர்களே, இந்தப் போட்டியிலே, புணேயைச் சேர்ந்த இளைஞர்களின் ஒரு குழுவால் ஓரளவுக்கு வெற்றி பெற முடிந்தது, அவர்களுடைய ட்ரோனுமே கூட கீழே விழுந்தது என்றாலும் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.  பல முறை முயற்சிகளுக்குப் பிறகு, இந்தக் குழுவின் ட்ரோன் செவ்வாய் கிரகச் சூழ்நிலைகளில் சில நேரம் பறப்பதில் வெற்றியடைந்தது.

நண்பர்களே, இந்தக் காணொளியைக் காணும் போது, என் மனதிலே மேலும் ஒரு காட்சி மலர்ந்தது.  சந்திரயான் – 2 நமது தொடர்புக்கு அப்பால் சென்ற கணம் தான் அது.  அந்த நாளன்று தேசமெங்கும், குறிப்பாக விஞ்ஞானிகள் சில கண நேரங்களுக்கு ஏமாற்றத்தின் மொத்த உருவமானார்கள்.  ஆனால் நண்பர்களே, தோல்வி அவர்களைத் தடைப்படுத்தவில்லை.  அதே நாளன்று அவர்கள் சந்திரயான் – 3இன் வெற்றிக்கதையை எழுதத் தொடங்கி விட்டார்கள்.  இந்த காரணத்தால் தான் சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையைத் தொட்ட போது, அது வெறும் ஒரு பயணத்தின் வெற்றியாக மட்டும் இல்லை.  அது தோல்வியிலிருந்து வெளிப்பட்டு வந்த நம்பிக்கையின் வெற்றி.   இந்தக் காணொளியில் தெரியும் இளைஞர்களின் கண்களில், எனக்கு அதே நம்பிக்கை தெரிகிறது.  நமது இளைஞர்களின் முனைப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பையும் ஒவ்வொரு முறை நான் பார்க்கும் போதும், எனக்குள்ளே உற்சாகம் ஊறுகிறது.  இளைஞர்களின் இந்த முனைப்புத் தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் மிகப்பெரிய சக்தியாகும்.

கைகொடுக்கும் தேன் உற்பத்தி!

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தேனின் இனிமையை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள் ஆனால், இதன் பின்னணியில் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது, எத்தனை பாரம்பரியங்கள் இருக்கின்றன, இயற்கையோடு எத்தனை அழகான ஒத்திசைவு என்பது பலவேளைகளில் நமக்குத் தெரிவதில்லை.

நண்பர்களே, ஜம்மு-கஷ்மீரத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் சுலாயி எனப்படும் வனத்துளசியின் மலர்களிலிருந்து இங்கேயிருக்கும் தேனீக்கள் மிகச் சிறப்பான தேனை உருவாக்குகின்றன.  இந்தத் தேன் வெண்மை நிறம் கொண்டது, இதை ராம்பன் சுலாயி தேன் என்று அழைக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் இந்த ராம்பன் சுலாயி தேனுக்கு புவிசார் குறியீட்டுக் காப்புரிமை கிடைத்தது.  இதன் பிறகு இந்தத் தேனுக்கு தேசமெங்கும் பிரத்யேகமான அடையாளம் ஏற்பட்டு வருகிறது.  

நண்பர்களே, தெற்கு கன்னரா மாவட்டத்தின் புத்தூரின் தாவரங்கள், தேன் உற்பத்திக்கு மிகச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.  இங்கே கிராமஜன்ய என்ற பெயர் கொண்ட விவசாயிகளின் அமைப்பு, இந்த இயற்கை வளத்திற்குப் புதிய திசையை அளித்து வருகிறது.  கிராமஜன்ய அமைப்பானது, இங்கே ஒரு நவீனமான பதப்படுத்தும் அலகை ஏற்படுத்தி, பரிசோதனைக்கூடம், பாட்டிலில் இடுதல், சேமிப்பு மற்றும் டிஜிட்டல் முறை கண்காணிப்பு போன்ற வசதிகளை அதில் இணைத்துவிட்டது.  இப்போது இதே தேனானது, ப்ராண்ட் அமைக்கப்பட்ட உற்பத்தியாக ஆகி, கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை சென்று சேர்கிறது.  இந்த முயற்சியினால், 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.

நண்பர்களே, கர்நாடகத்தின் தும்குரு மாவட்டத்தில் சிவகங்கா காலஞ்ஜியா என்ற பெயர் கொண்ட அமைப்பின் முயற்சியும் கூட மிகவும் பாராட்டுக்குரியது.  இவர்கள் வாயிலாக இங்கே ஒவ்வொரு உறுப்பினருக்கும் தொடக்கத்தில் இரண்டு தேனீ பெட்டிகள் அளிக்கப்படுகின்றன.  இப்படிச் செய்வதன் மூலம் அமைப்பானது பல விவசாயிகளைத் தனது இயக்கத்தில் இணைத்துவிட்டது.  இப்போது இந்த அமைப்பில் இணைந்த விவசாயிகள் கூட்டாகத் தேன் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள், மிகச் சிறப்பான முறையில் பேக்கேஜிங் செய்கிறார்கள், உள்நாட்டுச் சந்தைகள் வரை கொண்டு செல்கிறார்கள்.  இதனால் அவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது.  இப்படித்தான் நாகாலந்தின் cliff-honey hunting முறையும் கூட.  நாகாலந்தின் சோக்லாங்கன் கிராமத்தில் கியாமனி-யாங்கன் பழங்குடியினர், பலநூறு ஆண்டுகளாக தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இங்கே தேனீக்கள் மரங்களில் அல்ல, உயரமான செங்குத்துப் பாறைகளில் தங்கள் இருப்பிடங்களை அமைக்கின்றன.  ஆகையால் தேனை எடுக்கும் பணி மிகவும் ஆபத்து நிறைந்தது.  அந்த வகையிலே இங்கே இருப்போர் தேனீக்களோடு இனிமையாகப் பேசுகிறார்கள், அவற்றின் அனுமதி பெறுகிறார்கள்.  இன்று தாங்கள் தேனை எடுக்க வந்திருப்பதாக முதலில் தெரிவித்த பிறகே, தேனை எடுக்கிறார்கள். 

நண்பர்களே, இன்று பாரதத்தின் தேன் உற்பத்தியானது புதிய பதிவினை ஏற்படுத்தி வருகிறது.  11 ஆண்டுகள் முன்பாக, தேசத்தில் தேன் உற்பத்தி 76 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது.  இப்போது இது அதிகரித்து, ஒண்ணரை இலட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக ஆகி இருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளிலே, தேனின் ஏற்றுமதியும் கூட மூன்று மடங்குக்கும் அதிகமாக ஆகிவிட்டது.  தேன் மிஷனுக்கு உட்பட்டு, காதி கிராமோத்யோகும் கூட இரண்டேகால் இலட்சத்திற்கும் அதிகமான தேனீ பெட்டிகளை விநியோகம் செய்திருக்கிறது.   இதனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான புதிய சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.  அதாவது தேசத்தின் பல்வேறு பாகங்களில் தேனின் இனிமையும் அதிகரித்து வருகிறது.  மேலும் இந்த இனிமை விவசாயிகளின் வருவாயையும் அதிகரித்துக் கொடுக்கிறது. 

ஆனந்தம் கூட்டும் அனுபவ மையம்

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஹரியாணாவின் குருக்ஷேத்திரத்திலே மகாபாரதப் போர் நடந்தது என்பதை நாமனைவரும் நன்கறிவோம்.  ஆனால் போரின் இந்த அனுபவத்தை இப்போது நீங்கள் எல்லோரும் அங்கே மகாபாரத அனுபவ மையத்திலே, நேரடியாக அனுபவிக்கலாம்.  இந்த அனுபவ மையத்திலே மகாபாரதத்தின் சம்பவங்கள் முப்பரிமாண, ஒலிஒளிக் காட்சியாகவும், டிஜிட்டல் உத்தி வாயிலாகவும் வெளிப்படுத்தப்படுகிறது.  நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று நான் குருக்ஷேத்திரம் சென்ற போது, இந்த அனுபவ மையத்தின் அனுபவம், என்னை ஆனந்தத்தால் நிரப்பிவிட்டது.

நண்பர்களே, குருக்ஷேத்திரத்தின் பிரும்ம சரோவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கீதை மகோத்சவத்தில் பங்கெடுப்பது எனக்கு மிகச் சிறப்பானதாக இருந்தது.  எவ்வாறு உலகெங்கிலும் இருந்தும், புனித நூலான கீதையால் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காணும் போது நான் மிகவும் பரவசமடைந்தேன்.  இந்த மகோத்சவத்திலே ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா உள்ளிட்ட, உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

இந்த மாதத் தொடக்கத்திலே சவுதி அரேபியாவிலே முதன்முறையாக, ஒரு பொது மேடையில் கீதை வாசிக்கப்பட்டது.  ஐரோப்பாவின் லாட்வியாவிலேயும் கூட, ஒரு நினைவில் கொள்ளத்தக்க கீதை மகோத்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த மகோத்சவத்திலே லாட்வியா, எஸ்டோனியா, லித்துவானியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பெரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள்.

யூதக் குழந்தைகளைக் காத்த ஜாம் சாஹேப்

நண்பர்களே, பாரதத்தின் உயர்வான கலாச்சாரத்திலே அமைதி-கருணை ஆகிய உணர்வுகள் மிகவுயர்வானவையாக இருக்கின்றன.  இரண்டாம் உலகப்போரினைக் கற்பனை செய்து பாருங்கள், எங்கும் அழிவின் பயங்கரமான கோரத் தாண்டவம்.  இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் குஜராத்தின் நவாநகரின் ஜாம் சாஹப், மகாராஜா திக்விஜய் சிங் அவர்கள் புரிந்த மிகவுயர்வான காரியம் இன்றும் கூட நமக்கு உள்ளெழுச்சி அளித்துவருகிறது.  அந்தக் காலத்திலே ஜாம் சாஹப், போருக்கான கூட்டு பற்றியோ, போரின் உத்திகள் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை.  மாறாக இந்த உலகப் போருக்கு இடையே போலந்து நாட்டின் யூதக் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது என்ற கவலையில் இருந்தார்.  அவர் குஜராத்திலே ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து, புதுவாழ்வு தந்தார், இது இன்றும் கூட ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.  சில நாட்கள் முன்பாக, தெற்கு இஸ்ரேலின் மோஷாவ் நேவாதிமிலே ஜாம் சாஹேபின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.  இது மிகவும் சிறப்பான கௌரவமாகும்.  கடந்த ஆண்டு, போலந்தின் வார்ஸாவிலே, ஜாம் சாஹெபின் நினைவுச் சின்னத்திலே நினைவு மலர்களைக் காணிக்கையாக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.  அந்தக் கணம் என்னால் மறக்க முடியாத ஒன்று.

நெஞ்சைக் கவர்ந்த வேளாண் மாநாடு

என் கனிவான நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, இயற்கை வேளாண்மை பற்றிய ஒரு பெரிய மாநாட்டிலே பங்கெடுக்க நான் கோயமுத்தூர் சென்றிருந்தேன்.  தென் பாரதத்திலே இயற்கை வேளாண்மை தொடர்பாக நடைபெற்றுவரும் முயற்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நான் கவரப்பட்டேன்.  பல இளைஞர்கள், மெத்தப்படித்த தொழில்வல்லுநர்கள் இப்போது இயற்கை வேளாண்துறையை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.  அங்கே இருக்கும் விவசாயிகளோடு நான் உரையாடினேன், அவர்களின் அனுபவத்தை அறிந்து கொண்டேன்.  இயற்கை வேளாண்மை என்பது பாரதத்தின் பண்டைய பாரம்பரியங்களின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது, இந்தப் பூமித்தாயைக் காத்தளிக்க நாம் இதற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவர வேண்டும் என்பது நம்மனைவரின் கடமையாகும்.

கலாசாரம் காக்கும் காசி தமிழ்ச் சங்கமம்!

நண்பர்களே, உலகின் மிகப் பழமையான மொழி, உலகின் மிகவும் தொன்மையான நகரங்களிலே ஒரு நகரம் என்ற இந்த இரண்டின் சங்கமம் என்பது எப்போதுமே மிகவும் அற்புதமானதாக இருக்கும்.  நான் காசி தமிழ்ச் சங்கமம் பற்றித் தான் பேசுகிறேன்.  டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று காசியின் நமோ காட்டில், காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காம் பதிப்பு தொடங்கப்பட இருக்கிறது.  இந்த முறைக்கான காசி தமிழ்ச் சங்கமத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது – தமிழ் கற்கலாம், என்பதே அது.  யாருக்கெல்லாம் தமிழ் மொழி மீது ஈடுபாடு இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் காசி தமிழ்ச் சங்கமம் மகத்துவம் வாய்ந்த ஒரு மேடையாக ஆகியிருக்கிறது.  காசிவாழ் மக்களிடம் எப்போது பேசினாலும், காசி தமிழ்ச் சங்கமத்தின் அங்கமாக ஆவது அவர்களுக்கு இனிமையாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.  இங்கே அவர்களுக்கு புதிய கற்றல், புதியவர்களோடு பழகுதல் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.  இந்த முறையும் கூட காசிவாசிகள் பெரும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய தங்களுடைய சகோதர சகோதரிகளை வரவேற்க மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.  காசி தமிழ்ச் சங்கமத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன்.  அதோடு கூடவே, இப்படிப்பட்ட மேலும் மேடைகளைப் பற்றிச் சிந்தியுங்கள், இதன் வாயிலாக ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற உணர்வு மேலும் பலப்படும்.  இந்த இடத்திலே நான் மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். 

தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம்.

பரிமளிக்கும் பாரதக் கடற்படை

எனதருமை நாட்டுமக்களே, பாரதத்தின் பாதுகாப்பு அமைப்புக்கு பலம் கிடைத்திருக்கிறது எனும்போது இந்தியர்கள் அனைவருக்கும் இது பெருமிதம் தானே!!  கடந்த வாரம் மும்பையிலே ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பலானது இந்திய கப்பற்படையோடு இணைக்கப்பட்டது.  சிலர் இதன் உள்நாட்டு வடிவமைப்பு குறித்து நிறைய விவாதங்களில் ஈடுபட்டார்கள்.  அதே வேளையில் புதுச்சேரி மற்றும் மலபார் கரையோரப்பகுதிவாழ் மக்கள் இதன் பெயர் குறித்து சந்தோஷப்பட்டார்கள்.  மாஹே என்ற இதன் பெயர், மிகுந்த வளமான வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கும் ஒரு இடத்தின் பெயராகும்.  கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பலர் இந்தப் பெயர் தொடர்பாக ஒன்றைக் கூர்ந்து கவனித்தார்கள்; இந்தப் போர்க்கப்பலின் மேல்முனை அல்லது முகடு, உருமி மற்றும் களரிப்பயட்டுவின் பாரம்பரியமான வளைவான வாளைப் போலக் காணப்படுகிறது என்பதே அது.  நமது கடற்படை மிக விரைவாக தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறி வருகிறது என்பது நாமனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.  டிசம்பர் 4ஆம் தேதியன்று நாம் கடற்படை தினத்தைக் கொண்டாட இருக்கிறோம்.  இந்தச் சந்தர்ப்பத்திலே நமது வீரர்களின் அளவில்லா சாகஸத்திற்கும், பராக்கிரமத்திற்கும் நாம் கௌரவம் அளிக்க வேண்டும்.

நண்பர்களே, யாரெல்லாம் கடற்படையோடு தொடர்புடைய சுற்றுலாவில் நாட்டமுடையவர்களோ, அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் – நமது தேசத்திலே நாம் நிறைய கற்கக்கூடிய பல இடங்கள் இருக்கின்றன.  தேசத்தின் மேற்குக் கரையிலே குஜராத்தின் சோம்நாத்துக்கு அருகே, தீவ் என்றதொரு மாவட்டம் இருக்கிறது.  தீவிலே ஐ.என்.எஸ். குக்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட குக்ரி நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் இருக்கிறது.  அதே போல, கோவாவிலே நேவல் ஏவியேஷன் மியூசியம் இருக்கிறது, இது ஆசியாவிலே மிகவும் தனித்தன்மைவாய்ந்த அருங்காட்சியகமாகும்.  ஃபோர்ட் கொச்சியின் ஐ.என்.எஸ். துரோணாச்சாரியாவின் இண்டியன் நேவல் மேரிடைம் மியூசியம் இருக்கிறது.  இங்கே நமது தேசத்தின் கடல்சார் வரலாறும், இந்திய கடற்படையின் பரிணாம வளர்ச்சி பற்றியும் பார்க்கலாம்.  ஸ்ரீ விஜயபுரம் என்ற அந்நாளைய போர்ட் ப்ளேரிலே, சமுத்ரிகா என்ற நேவல் மரைன் மியூசியம், அந்தப் பகுதியின் வளமான வரலாற்றை, நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.  கார்வாரில் ரவீந்திரநாத் டகோர் கடற்கரையிலே போர்க்கப்பல் அருங்காட்சியகத்திலே ஏவுகணைகள்- ஆயுதங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.  விசாகப்பட்டினத்திலும் கூட ஒரு நீர்மூழ்கிக் கப்பல், ஹெலிகாப்டர் மற்றும் விமான அருங்காட்சியகம் இருக்கிறது, இது இந்திய கடற்படையோடு இணைந்தது.  நீங்கள் இந்த அருங்காட்சியகங்களுக்குச் சென்று கண்டிப்பாகப் பாருங்கள் என்று உங்கள் அனைவரிடமும், குறிப்பாக இராணுவ வரலாற்றிலே பிரியம் உள்ளவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

mann ki baat

பழகலாம் பனிக்காலச் சுற்றுலா!

என் மனம்நிறை நாட்டுமக்களே, குளிர்காலம் வந்துவிட்டது, கூடவே குளிர்காலத்தோடு தொடர்புடைய சுற்றுலாவுக்கான சமயமும் வந்துவிட்டது.  உலகின் பல நாடுகள், குளிர்காலத்தில் நடக்கும் சுற்றுலாவையும், பனிக்காலச் சுற்றுலாவையும் தங்களுடைய பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஆக்கியிருக்கிறார்கள்.  பல நாடுகளில் உலகின் மிகவும் வெற்றிகரமான பனிக்காலக் கொண்டாட்டம் மற்றும் பனிக்கால விளையாட்டுக்களின் மாதிரியாக ஆக்கி இருக்கிறார்கள்.  இந்த நாடுகள், பனிச்சறுக்கு, பனியில் நெடும் பயணம் மேற்கொள்வது, பனிபடர்ந்த மலைகளில் ஏறுவது மற்றும் குடும்ப பனிப்பூங்காக்கள் போன்ற அனுபவங்களைத் தங்களுடைய அடையாளமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.  இவர்கள் தங்களுடைய பனிக்காலக் கொண்டாட்டங்களையும் கூட உலகளாவிய ஈர்ப்பாக மாற்றி இருக்கிறார்கள். 

நண்பர்களே, நமது தேசத்திலும் கூட, பனிக்காலச் சுற்றுலாவிற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.  நம்மிடத்திலே மலைகளும் இருக்கின்றன, கலாச்சாரமும் இருக்கிறது, அதோடு சாகஸத்திற்கான எல்லையில்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.  இப்போதெல்லாம் உத்தராகண்டிலே பனிக்காலச் சுற்றுலாவானது, மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.  குளிர்க்காலத்திலே ஔலி, முனஸ்யாரி, சோப்டா, டேயாரா போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது.  சில வாரங்கள் முன்பு தான் பித்தோர்கட் மாவட்டத்தின் 14½ ஆயிரம் அடி உயரத்திலே ஆதி கைலாசத்திலே, மாநிலத்தின் முதல் High Altitude Ultra Run Marathon போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நம்முடைய தேசத்தின் 18 மாநிலங்களிலிருந்து 750க்கும் அதிகமான தடகள வீரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.  60 கிலோமீட்டர் நீளமான ஆதி கைலாசச் சுற்று ஓட்டம், உறையவைக்கும் குளிரிலே, காலை 5 மணிக்குத் தொடங்கியது.  இத்தனை குளிரைத் தாண்டி, மக்களின் உற்சாகத்தைச் சொல்லி மாளாது.  ஆதி கைலாச யாத்திரையிலே, மூன்று ஆண்டுகள் முன்பு, வெறும் 2,000த்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தார்கள், இப்போது இந்த எண்ணிக்கை 3,000த்திற்கும் அதிகமாக ஆகி விட்டது.

நண்பர்களே, சில வாரங்களிலே உத்தராகண்டின் பனிக்கால விளையாட்டுக்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து விடும்.  நாடெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், சாகஸப் பிரியர்கள், விளையாட்டுக்களோடு தொடர்புடையவர்கள் மத்தியில் ஏகப்பட்ட உற்சாகம்.  Skiing- Snow-boarding என்ற இருவகை பனிச்சறுக்காகட்டும், பனிமீது நடைபெறும் பலவகையான விளையாட்டுக்களுக்குமான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.  உத்தராக்கண்டின் பனிக்காலச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்க வேண்டி, இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.  தங்குவிடுதிகள் தொடர்பாக புதிய கொள்கைத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நண்பர்களே, குளிர்காலத்தில் இந்தியாவில் திருமணம் செய்வது என்ற இயக்கம் கூட வித்தியாசமான கொண்டாட்டமாக ஆகி வருகிறது.  குளிர்காலத்தின் அருமையான வெயிலாகட்டும், மலையிலிருந்து இறங்கும் மேகக்கூட்டமாகட்டும், Destination Wedding ற்காக மலைகளும் கூட இப்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன.  பல திருமணங்கள், குறிப்பாக கங்கைக்கரையிலே நடக்கின்றன.

நண்பர்களே, குளிர்காலத்தின் இந்த நாட்களில், ஹிமாலயத்தின் பள்ளத்தாக்குகள் தரும் அனுபவம், நம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு இருப்பவையாக இருக்கின்றன.  நீங்கள் இந்தக் குளிர்காலத்தில் எங்காவது செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சொன்னால், ஹிமாலயத்தின் பள்ளத்தாக்குகளை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

பூட்டான் மக்களால் பெருமிதம்!

நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக நான் பூட்டான் சென்றிருந்தேன்.  இப்படிப்பட்ட பயணங்களின் போது பலவகையான உரையாடல்கள்-விவாதங்கள் நடத்தும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.  என்னுடைய இந்தப் பயணத்தின் போது, பூட்டானின் அரசர், இதற்கு முன்பு அரசராக இருந்த தற்போதைய அரசரின் தந்தை, அந்த நாட்டின் பிரதமர், இன்னும் பிறரை நான் சந்தித்தேன்.  இவற்றின் போது அனைவர் கூறுவதையும் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.  அனைவரும் அங்கே பௌத்த நினைவுப்பொருட்கள், அதாவது பகவான் புத்தரின் புனிதமான பொருட்களை அனுப்பியமைக்காக இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.  இதை நான் கேட்ட போது, என் இதயத்தில் ஆனந்தமும் பெருமிதமும் பொங்கின.

நண்பர்களே, பகவான் புத்தரின் பவித்திரமான எச்சங்கள் தொடர்பாக வேறு பல நாடுகளிலும் கூட இதே போன்ற உற்சாகத்தை என்னால் காண முடிந்தது.  கடந்த மாதம் தான் தேசிய அருங்காட்சியகத்திலிருந்து இந்தப் புனிதமான பொருட்கள் ரஷியாவின் கல்மீகியாவிற்குக் கொண்டு போகப்பட்டன.  இங்கே பௌத்த சமயத்திற்கு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.  ரஷியாவின் தொலைவான பகுதிகளிலிருந்து எல்லாம் அதிக எண்ணிக்கையில் இவற்றை தரிசிக்க வந்தார்கள் என்று என்னிடம் கூறினார்கள்.  இந்தப் புனிதமான பொருட்கள் மங்கோலியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்திற்குக் கூட கொண்டு செல்லப்பட்டன.  அனைத்து இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் வரும் மக்களின் பெரும் உற்சாகத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.  இவற்றை தரிசிக்க தாய்லாந்தின் அரசரே கூட வந்திருந்தார்.  உலகெங்கிலும் பகவான் புத்தரின் பவித்திரமான பொருட்களிடம் இந்த வகையான ஆழமான இணைவினைக் காணும் போது மனதில் உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன.  ஒரு விஷயமானது உலகெங்கிலும் இருப்போரை, பரஸ்பரம் இணையச் செய்யும் ஒரு சாதனமாக எப்படி ஆகிறது என்பதை நினைக்கும் போது மிகவும் இதமாக இருக்கிறது.

mann ki baat manadhin kural
#image_title

உள்ளூர் பொருளுக்குக் குரல் கொடுப்போம்

என் உளம்நிறை நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே எப்போதுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை உங்களிடம் நிரந்தரமாக இருத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன்.  சில நாட்கள் முன்பாகத் தான், ஜி20 உச்சி மாநாட்டின் போது, உலகின் பல தலைவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவது எனும் போது இதே மந்திரம் கடைப்பிடிக்கப்பட்டது.  நாட்டுமக்கள் சார்பாக உலகத் தலைவர்களுக்கு நான் அளித்த நினைவுப்பரிசிலே, இந்த விஷயம் குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட்டது.  ஜி20யின் போது, நான் தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவருக்கு நடராஜர் திருவுருவத்தின் வெண்கலச் சிலையை அளித்தேன்.  இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் கலாச்சாரப் பாரம்பரியத்தோடு இணைந்த, சோழர்களின் சிற்பக்கலையின் அற்புதமான எடுத்துக்காட்டு.  கனடா நாட்டின் பிரதமருக்கு வெள்ளியாலான குதிரையின் மாதிரி அளிக்கப்பட்டது.  இது இராஜஸ்தானத்தின் உதய்பூரின் நேர்த்தியான சிற்பக்கலையைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது.  ஜப்பானிய பிரதமருக்கு வெள்ளியாலான புத்தரின் திருவுருவச்சிலை அளிக்கப்பட்டது.  இதிலே தெலங்கானா மற்றும் கரீம்நகரின் புகழ்மிக்க வெள்ளி கைவினைத்திறன் மிக நுணுக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.  இத்தாலியின் பிரதமருக்கு மலர்கள் வடிவிலான வெள்ளியாலான முகம்பார்க்கும் கண்ணாடி அளிக்கப்பட்டது.  இதுவுமே கூட கரீம்நகரின் பாரம்பரியமான உலோகச் சிற்பக்கலையைக் காட்சிப்படுத்துகிறது.  ஆஸ்ட்ரேலிய பிரதமருக்கு நான் பித்தளை உருளியைப் பரிசாக அளித்தேன், இது கேரளத்தின் மன்னாரின் சிறப்பான கலைப்படைப்பாகும்.  பாரத நாட்டின் கைவினைத்திறன், கலை மற்றும் பாரம்பரியம் பற்றி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் நோக்கம்.  மேலும் நமது கைவினைஞர்களின் திறனுக்கு உலகாளாவிய மேடை கிடைக்க வேண்டும்.

நண்பர்களே, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உணர்வினை தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் இப்போது தங்களுடையதாக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இந்த ஆண்டு பண்டிகைகளுக்காக சந்தைகளில் வாங்கச் சென்ற போது, ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக உணர்ந்திருக்கலாம்.  மக்களின் விருப்பம், மேலும் வீடுகளுக்கு வரும் பொருட்களில், தெளிவான ஒரு அறிகுறி காணப்பட்டது, அதாவது தேசம் சுதேசியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது.  பாரதநாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் மனதாரத் தேர்ந்தெடுத்தார்கள்.  இந்த மாற்றத்தைச் சின்னச்சின்னக் கடைக்காரர்களும் கூட உணர்ந்தார்கள்.  இந்த முறை இளைஞர்கள் தாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்திற்கு வேகம் அளித்தார்கள்.  வரவிருக்கும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர்பான வாங்குதல் என்ற புதிய சுற்று தொடங்கி விடும்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை மறந்துவிடாதீர்கள் என்பதை நான் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன், தேசத்தில் தயாரிக்கப்பட்டதை மட்டுமே வாங்குங்கள், நமது நாட்டுமக்களின் உழைப்பு இருப்பனவற்றை மட்டுமே விற்பனை செய்யுங்கள்.

விளையாட்டில் ஜொலித்த வீரமங்கையர்

எனதருமை நாட்டுமக்களே, பாரதநாட்டு விளையாட்டுக்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த மாதம் சூப்பர்ஹிட் என்றே சொல்ல வேண்டும்.  பாரதநாட்டுப் பெண்கள் அணி ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பையை வென்றதோடு இந்த மாதம் தொடங்கியது.  ஆனால் அதன்பிறகு, களத்திலே மேலும் பல செயல்பாடுகளைப் பார்க்க முடிந்தது.  சில நாட்கள் முன்பு தான் டோக்கியோவிலே கேட்டல் குறைபாடு உடையோருக்கான ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன, அதிலே பாரதம் இதுவரை சாதித்திராத அளவுக்குப் போட்டியிட்டு, 20 பதக்கங்களை ஜெயித்திருக்கிறது.  நமது வீராங்கனைகளும் கூட, கபடிக்கான உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தார்கள்.  ஒட்டுமொத்தப் போட்டியிலுமே அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டது, நாட்டுமக்கள் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது.  உலக குத்துச்சண்டைப் போட்டிகளின் இறுதிப் போட்டியிலும் கூட நமது வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது, அங்கும் அவர்கள் 20 பதக்கங்களை வென்றார்கள்.

நண்பர்களே, எது அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது என்றால், நமது பெண்களின் குழுவானது பார்வைத்திறன் குன்றியவர்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிதான்.  பெரிய விஷயம் என்னவென்றால், நமது இந்தக் குழுவானது எந்த ஒரு ஆட்டத்திலும் தோற்கவில்லை, இந்தப் பந்தயத்தையே வெற்றி கொண்டார்கள்.  நாட்டுமக்கள் அனைவரும் இந்தக் குழுவின் அனைத்து வீராங்கனைகள் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள்.  நானும் இந்தக் குழுவினரை, பிரதமர் இல்லத்திலே சந்தித்தேன்.  உண்மையிலேயே இந்தக் குழுவின் நம்பிக்கை, அவர்களுடைய பேரார்வம் ஆகியவை நமக்கு நிறைய கற்றலை அளிக்கிறது.   இந்த வெற்றி நமது விளையாட்டு சரித்திரத்தின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, இது அனைத்து இந்தியர்களுக்கும் கருத்தூக்கமாக இருந்துவரும்.

உடலினை உறுதி செய்

நண்பர்களே, இப்போதெல்லாம் நமது தேசத்திலே, Endurance Sports – உடலுறுதி விளையாட்டுக்கள் என்ற புதிய விளையாட்டுக் கலாச்சாரம் கூட விரைவாக உருவாகி வருகிறது.  இதன் பொருள் என்னவென்றால், இப்படிப்பட்ட விளையாட்டுச் செயல்பாடுகள் வாயிலாக உங்களுடைய தாங்குதிறன், அதாவது தாக்குப்பிடிக்கும் தன்மை சோதித்துப் பார்க்கப்படுகிறது.  சில ஆண்டுகள் முன்புவரை, மாரத்தான் மற்றும் பைக்தான் போன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் எல்லாம், சில குறிப்பானவர்கள் வரை மட்டுமே என்ற வரையறைக்குள் இருந்தன.  ஆனால் இப்போது பலதும் மாறிவிட்டது.  நாடெங்கிலும் ஒவ்வொரு மாதமும் 1500க்கும் மேற்பட்ட இந்த Endurance Sports – உடலுறுதி விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வேண்டி தடகள வீரர்கள் தொலைவுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள்.

நண்பர்களே, இந்த உடலுறுதி விளையாட்டுக்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு – Ironman Triathlon.  நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்களிடம் ஒரு நாளுக்கும் குறைவான நேரம் மட்டுமே இருக்கிறது, இந்தக் காலத்திற்குள்ளாக நீங்கள் 3 வேலைகளைச் செய்யவேண்டும், கடலிலே 4 கிலோமீட்டர் வரை நீந்த வேண்டும், 180 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும், சுமார் 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட வேண்டும் என்று உங்களிடம் கூறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே!!  ஆ… இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் எண்ணுவீர்கள்.  ஆனால் இரும்பையொத்த மனவுறுதி படைத்தவர்கள், இதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார்கள்.  ஆகையால் தான் இதனை Ironman Triathlon என்று கூறுகிறார்கள்.

கோவாவிலே சில நாட்களுக்கு முன்னால், இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இப்போதெல்லாம் இது போன்ற ஏற்பாடுகளிலும் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள்.  இப்படிப்பட்ட மேலும் பல போட்டிகளும் இருக்கின்றன, இவை நமது இளைய நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஆகி வருகின்றன.  இப்போதெல்லாம் பலர் Fit India Sundays on Cycle போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க ஒருங்கிணைகிறார்கள்.  உடலுறுதிக்கு முதன்மை அளிக்கவல்ல நிகழ்ச்சிகள் இவை.

குளிர்காலத்தில் கவனம் தேவை

நண்பர்களே, உங்களை ஒவ்வொரு மாதமும் சந்திப்பது என்பது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.  உங்களுடைய சம்பவங்கள், உங்களுடைய முயற்சிகள், புதிய புதிய வகைகளில் என்னிடத்தில் உள்ளெழுச்சியை ஏற்படுத்துகின்றன.  உங்கள் செய்திகளில் இருக்கும் ஆலோசனைகள், உங்களுடைய அனுபவங்கள், இவற்றோடு கூட, பாரதத்தின் பன்முகத்தன்மையையும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைக்கும் உத்வேகம் கிடைக்கிறது. 

நாம் அடுத்த பதிப்பிலே சந்திக்கும் தருணத்தில், 2025ஆம் ஆண்டு, நிறைவின் நிறைவான கணங்களில் இருப்போம்.  தேசத்தின் பெரும்பான்மையான பாகங்களில் இப்போது குளிரும் கூட அதிகமாகிக் கொண்டே செல்லும்.  குளிர்காலத்திலே நீங்கள் உங்களையும், உங்களுடைய குடும்பத்தாரையும் குறிப்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.  அடுத்த மாதம் நாம் சில புதிய விஷயங்கள், புதிய நபர்களைப் பற்றிய விவாதங்களைக் கண்டிப்பாக நிகழ்த்துவோம்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ள

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக

பஞ்சாங்கம் டிச.2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி

திருப்பரங்குன்றம் தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம்

Topics

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ள

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக

பஞ்சாங்கம் டிச.2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி

திருப்பரங்குன்றம் தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம்

சபரிமலையில் 15நாட்களில் 12.48 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்..

சபரிமலையில் மண்டல பூஜைக்கு நடைபெறந்த நாள் முதல் இன்று வரை 15நாட்களில்...

ஆர்எஸ்எஸ் ஸின் நோக்கம் அதிகாரம் அல்ல, சேவை!

அதிகாரத்தை அடையும் போராட்டம் அல்ல ஆர்எஸ்எஸ்ஸின் வரலாறு. மாறாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பிரிவினை அதன் நோக்கம் அல்ல. மாறாக நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பது.

கைசிக ஏகாதசி சிறப்பு: நம்பாடுவான், பிரம்மரட்சஸ், கைசிக புராணம்!

கைசிக ஏகாதசி! - கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும் "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".

Entertainment News

Popular Categories