
புது தில்லி: எதிர்க் கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 9ஆவது நாளாக இன்றும் முடங்கியது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம், ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஆந்திர மாநிலக் கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தின் அதிமுக., உள்ளிட்ட கட்சி எம்பி.,க்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இத்தகைய அமளி காரணமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் பெருமளவு பாதிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தின் 2வது அமர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது முதல், இன்று வரை எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய தொடர் அமளி காரணமாக, நிதி மசோதாவையும், துணை மானியக் கோரிக்கை மசோதாவையும் எவ்வித விவாதமும் இன்றி மக்களவையில் ஆளும் தரப்பு நிறைவேற்றியிருக்கிறது.



