சென்னை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்போதைய தலையாய பிரச்னையான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை கூடிய சட்டப் பேரவை சிறப்பு அமர்வில் காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, அத்துடன் தீர்மான நகலையும் இணைத்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த பிப்.16 அன்று, உச்ச நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்குமாறு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் முதல்வர்.
உச்சநீதிமன்றம் நிர்ணயித்த ஆறு வார காலக் கெடுவில் 4 வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக்களை அமைத்து அவை முழு வீச்சுடன் இயங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய நீராதாரத்துறை, நதிகள் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றுக்கு பிரதமர் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமராகிய தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அதில் கூறியுள்ளார்.