
சென்னை: டிடிவி தினகரன் வியாழக்கிழமை நேற்று துவக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்து, அதிமுக., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இதற்கு நீதிமன்றம், இதனை முறையாக சிவில் வழக்காக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.
அதிமுக.,வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செலம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மதுரையில் டி.டி.வி. தினகரன் அறிமுகப்படுத்திய கொடி அதிமுக., கொடியைப் போன்றே இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக., கொடியில் தலா 50 சதவீதம் கருப்பு – சிவப்பு வண்ணங்களும் நடுவில் வெள்ளை நிறத்தில் அண்ணா படமும் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியில் தலா 25 சதவீதம் கருப்பு – சிவப்பு வண்ணங்களும் நடுவில் 50 சதவீதம் வெள்ளையும் இருப்பதாக அவர் கூறினார். எனவே கொடியின் வடிவமைப்பில் மாறுபாடுகள் இருப்பதாக அவர் கூறினார்.
ஏற்கெனவே, கருப்பு, சிவப்பு வண்ணத்தை தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க., தி.க. உள்ளிட்ட 7 கட்சிகள் பயன்படுத்துவதாகவும் எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அதிமுக., கொடியைப் போல் இருப்பதாகக் கூறுவது தவறு எனவும் கூறினார். இருப்பினும், தங்கள் கருத்துக்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை சிவில் வழக்காக வரும் செவ்வாய்க்கிழமை ஏற்பதாகவும், அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.



