
சென்னை: சென்னையில் அரை நிர்வாணக் கோலத்தில் பசியில் மயங்கிக் கிடந்த முதியவருக்கு மனித நேயத்துடன் ஆடை வாங்கி அணிவித்த போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தப் படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள சிக்னல் அருகே வயதான நபர் ஒருவர் பசி மயக்கத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் படுத்திருந்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் அந்தோணி அருகில் இருந்த ஜவுளிக் கடையில் கைலி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து அவருக்கு அணிவித்துள்ளார். இதனை அருகில் இருந்த ஒருவர் தன் செல்போனில் க்ளிக் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது இப்போது வைரலாகி வருகிறது.
இணையத்தில் மட்டுமல்ல, அந்தப் போக்குவரத்து போலீஸ்காரரின் மனிதநேய நடவடிக்கையை காவல் துறையின் உயரதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.



