
சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டபடி, மேலாண்மை வாரியம் ஒன்றைத் தவிர, வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க இயலாது என மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி அளித்த காவிரி மீதான தனது இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியது. இதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், மத்திய அரசு மாற்று வழிகளை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்றும், காவிரி மேற்பார்வை வாரியம் எல்லாம் தீர்வுக்கு ஆகாது என்றும் கூறி வருகின்றன.
இதையடுத்து தில்லி சென்ற தமிழக பொதுப் பணித்துறை செயலர் பிரபாகர், தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தனர். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் தவிர வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க முடியாது என எழுத்துப்பூர்வமாக தமிழக அரசு அதிகாரிகள் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று இது தொடர்பாக, காவிரி வழக்கில் தமிழகத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சேகர்நாப்தேவை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது, நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மத்திய அரசின் மீது தொடரலாம் என்று யோசனை கூறப்பட்டதாம். அப்படியே செய்யப் போவதாக தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கர்நாடகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் தேதிக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார். எனவே, உச்ச நீதிமன்ற கெடு முடிவடைவதால் காவிரிப் பிரச்னையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.



