
பாஜக.,வில் சேருமாறு அக்கட்சித் தலைவர் அமித் ஷா விடுத்த அழைப்பை மகாராஜா குடும்பம் நிராகரித்ததில் கர்நாடக பாஜக தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, நேற்று மைசூரு மகாராணி பிரமோத தேவியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களிடம் தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், பாஜகவில் சேருமாறு அமித் ஷா விடுத்த அழைப்பை மைசூரு மகாராஜா குடும்பம் நிராகரித்து விட்டது. இது உடன் சென்ற எடியூரப்பா உள்ளிட்ட மாநில பாஜக., தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா. இவர் நேற்று மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கூட்டங்களில் பேசினார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூருவில் காங்கிரஸை தோல்வியடையச் செய்ய வேண்டும் என பாஜக.,வினருக்கு கட்டளையிட்டுள்ளார் அமித் ஷா. அதனால் மைசூரு நகரில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்கள் பாஜக.,வினர்.
அதன் காரணத்தால், மைசூரு நகரில் செல்வாக்கு பெற்ற மன்னர் குடும்பத்தைக் கண்டு, பாஜக.,வில் மன்னர் வாரிசுகளைச் சேர அழைப்பு விடுக்கலாம் என்று கூறினர். மேலும், மைசூரு பாஜக நிர்வாகிகள் கூறியபடி அட்டூர்மடம், கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஆகியவற்றுக்கு அமித் ஷா நேரில் சென்று ஆசி பெற்றார். பின்னர் மைசூரு அரண்மனைக்குச் சென்ற அமித் ஷா மறைந்த மகாராஜா ஸ்ரீகண்ட நரசிம்மதத்த உடையாரின் மனைவியும் மகாராணியுமான பிரமோத தேவியையும், இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையாரையும் சந்தித்தார்.

அப்போது அரசியல் ரீதியாக பாஜக.,வுக்கு வருமாறு மன்னர் வாரிசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமித் ஷா. மைசூருவில் காங்கிரஸை வீழ்த்த மைசூரு மகாராஜா குடும்பத்தின் ஆதரவு தேவை என்றும், மகாராஜா குடும்பம் பாஜகவில் சேர்ந்தால் உரிய மரியாதையும் பதவியும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் பேசப்பட்டுள்ளது.
தொடர்ந்து தங்களது கோரிக்கையை ஏற்று பாஜக.,வில் இணைந்தால் குடும்ப உறுப்பினருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும், மறைந்த மகாராஜா ஸ்ரீகண்ட நரசிம்ம தத்த உடையார் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்ததைப் போல அவரது மனைவி அல்லது வாரிசும் இருக்கலாம் என்றும், இந்த தேர்தலில் பாஜக.,வை ஆதரிக்க வேண்டும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.

ஆனால், மகாராணி பிரமோத தேவி, தனது கணவர் காங்கிரஸில் நீண்ட காலம் இருந்தவர் என்பதாலும், உடனடியாக பாஜக.,வில் சேருவது குறித்து உறுதியாகக் கூற முடியாது என்றும், ஆனால் தங்களின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
குடும்ப வாரிசான இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்த சாம்ராஜ உடையாரும் தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் எதிர்ப்பார்த்துப் போன பாஜக.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



