
உரிமையாகப் போராடிப் பெற்ற காவிரி நீரை முறையாக சேமித்து வைத்து திட்டமிடலுடன் செலவழிப்பதில் தமிழக அரசியல்வாதிகளும் அரசும் அக்கறை காட்டியுள்ளதா?
இந்தக் கேள்விக்கான பதில்களில் சில…
நம் வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பப் பட்ட வாசகர்களின் கருத்துகளில் இரண்டு…!
கருத்து 1: கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகாவில் பொழியும் மழை அளவை விட தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று, வடகிழக்கு பருவகாற்று இவை இரண்டிலும் பெய்யும் மழை அளவு மிகஅதிகம் ! நீளமான காவேரி மேட்டூர் பகுதிகளிலும் இதே நிலை! ஆனால்15 வருடமாக நம் அரசு நீர் சேமிக்க பணம் செலவிடலை!

கருத்து 2: காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் பொங்குபவர்கள் கீழ்க்காணும் விஷயங் களுக்காகவும் பொங்க வேண்டும் – போராட வேண்டும்.
1) காவிரி நதிப்படுகையில் அள்ளப்படும் மண் ஆண்டுக்கு எத்தனை டன்?
2) காவிரி தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கலில் இருந்து, அது கடலில் கலக்கும் பூம்புகார் வரை அதன் கரை நெடுகிலும் மணல் அள்ளப்படும் மையங்கள் எத்தனை உள்ளன?
3) இவ்வாறு உள்ள மணல் அள்ளும் மையங்களில் அனுமதிக்கப்பட்டவை எவ்வளவு? அனுமதி இன்றி அள்ளப்படும் இடங்கள் எத்தனை?
4) அப்படி அனுமதிக்கப்பட்ட மையங்களிலும் ஒரு யூனிட்டுக்கு கட்டணம் செலுத்தப்பட்டால் ஒரு யூனிட் மட்டுமே அள்ளப்படுகிறதா? அல்லது அதற்கு மேலும் அள்ளப்படுகிறதா?
5) குமாரபாளையம், பவானி, ஈரோடு பகுதிகளில் காவிரியில் கொட்டப்படும் சாயக்கழிவுகள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன? சுற்றுச் சூழல் துறை இவ்வாறு சாயக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு ஒருமாதத்துக்கு இத்தனை லிட்டர் என்று – அபாய அளவுக்கு உட்பட்டு – ஏதேனும் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளதா? அப்படி இருப்பின் அந்த அளவுக்குள் மட்டுமே சாயக்கழிவுகள் கொட்டப்படுகிறதா? அல்லது அந்த அளவு மீறப்படுகிறதா?
6) காவிரி பற்றி இவ்வளவு கவலை கொள்பவர்கள் “தென்பெண்ணை” பற்றிப் பேசுவதே இல்லையே: அதுவும் கர்நாடகத்தில் உற்பத்தி ஆகித் தமிழகத்தில் புகுந்து கடலூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது.
7) அந்தத் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கிருஷ்ணகிரி அருகே அணைக்கட்டு உள்ளது. கர்நாடகப் பெருமழையானது தென்பெண்ணையிலும் வெள்ளம் பெருக்கெடுக்க வைத்து, கிருஷ்ணகிரி அணையை நிரப்பிவிடும். அப்போது கிருஷ்ணகிரி அணை திறக்கப்படும் போது, கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்படும். கிருஷ்ணகிரிக்கு முன்பாக காவேரிப்பட்டணம் – அங்கு அப்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
8) ஆனால் அதே நேரத்தில், அதே தென்பெண்ணையை நீங்கள் சென்னை – திருச்சி GST ரோட்டில் கடந்தால், உளுந்தூர் பேட்டைக்கு முன்பாக, விழுப்புரம் தாண்டியதும் தென்பெண்ணை க்ராஸ் ஆகும் – துளி நீர் இல்லாமல் வேலிக்காத்தான் முள்மரங்கள் படர்ந்து கிடக்கும். கிருஷ்ணகிரி அணையில் பெருகித் திறக்கப்படும் நீர், தமிழ்நாட்டுக்கு உள்ளேயே கடலூர் வந்து சேர்வதில்லை.
9) வழியில் மணலை அள்ளித் தென்பெண்ணையின் ஓட்டத்தைத் தடுத்தது யார்?
10) தென்பெண்ணை மட்டுமல்ல, வைகை, பாலாறு, தாமிரபரணி… – எனத் தமிழ்நாட்டின் ஜீவ நதிகள் அத்தனையுமே நாசம் ஆக்கி இருக்கிறோம்- மணலை அள்ளி அள்ளி! ரசாயனக் கழிவுகளைக் கலந்து கலந்து அத்தனை ஆற்றையும் நாசமாக்கி உள்ளோம்.
இந்த அரசியல் கட்சிகளுக்கு யார் மணல் அள்ளுகிறான் என்று தெரியாதா? இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்கும் ஆயிரக்கணக்கான லாரிகள் – பல்வேறு ஆறுகளைச் சுரண்டும் நபர்கள், நிறுவனங்கள் யார் யார் என்று இந்த அரசியல் கட்சிகளுக்குத் தெரியாதா?
ஏன், அந்த ராட்சத மணல் கடத்தல் லாரிகளை மறித்து, அவர்கள் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவுதான் மணல் அள்ளுகிறார்களா என்று சோதனை போட்டு, அத்து மீறல் இருந்தால் மக்கள் முன்பு அம்பலப்படுத்துங்களேன்: அதற்கு எந்தக் கட்சியும் முன்வர மாட்டார்கள் – காரணம் மணல் முதலாளிகள், சாய ஆலை முதலாளிகள் தரும் நன்கொடைகள் தேர்தல் நேரத்தில் பல கட்சிகளுக்கும் தேவை!
‘காவிரி மேலாண்மை வாரியம்’- என்பது ஒரு கண்காணிப்பு நிர்வாக அமைப்பு. அது அமையாமலே போனாலும், கர்நாடகத்தில் பெருமழை பொழியும் போது அவர்களின் அணைக்கட்டுகள் நிரம்பும் போது அவர்கள் திறந்துதான் தீர வேண்டும் – அப்படிப் பொங்கிப் பெருகி வரும் நீரைப் பிடித்து வைக்கவாவது நம்மிடம் ஏற்பாடுகள் இருக்கிறதா? ‘செக்’ டேம்கள் கட்டி உள்ளோமா? மணல் படுகையை நீரோட்டம் தடையின்றிச் செல்லும் வகையில், மணலைச் சுரண்டாமல் வைத்துள்ளோமா? அப்படியே காவிரி மேலாண்மை வாரியமே அமைந்தாலும் அதன் உத்தரவுப்படி, வந்து சேரும் நீரை, கடைமடை வரை கொண்டு சேர்க்கும் வல்லமை நமக்கு உள்ளதா?
சரி கர்நாடகத்திலேயே மழை பெய்யவில்லை – வானம் பொய்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியும் நடந்து இருக்கிறது கடந்த காலங்களில்! அங்கேயே காவிரி பொட்டல் காடாகக் காய்ந்து கிடந்தால், அப்போது ‘காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு’- என்று பேப்பரில் எழுதியிருப்பதை வைத்துக் கொண்டு தண்ணீரை வரவழைக்க முடியுமா?



