
புது தில்லி: மீண்டும் மூன்றாம் அணி என்ற தளத்தை வரும் 2019 பொதுத் தேர்தலில் ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அதற்காக பல்வேறு மாநிலக் கட்சி அரசியல்வாதிகளை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை இன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்துப் பேசினார்.
வரும் 2019 பொதுத் தேர்தலில், மூன்றாம் அணியின் மூலம் அதிகாரம் பெறும் முயற்சியை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்னோட்டமாக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற காயை வைத்து அரசியலை நகர்த்தி வருகிறார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசால் ஏற்கப்படாத நிலையில், பாஜக.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. தொடர்ந்து இரு கட்சிகளிடையே வார்த்தை மோதல்கள் வெடித்தன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தே.ஜ.கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.
பா.ஜ.க கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிய நிலையில், முதல் முதலாக அதன் தலைவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தில்லி சென்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் எதிர்க் கட்சித் தலைவர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரை சந்தித்துப் பேசினார். அது மட்டுமல்லாது தே.ஜ.கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுரையும் சந்தித்து பேசினார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்தோபாத்யாய, அதிமுக., எம்.பி., டாக்டர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பாஜக., கூட்டணியில் உள்ள அப்ணாதளம் கட்சித் தலைவர் அனுப்ரியா படேல், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புகளின்போது, மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது. அவருடைய இன்றைய சந்திப்புப் பட்டியலில் முதலில் தில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடம்பிடித்தார். அவரை இன்று காலை சந்திரபாபு நாயுடு தில்லி ஆந்திர பவனில் சந்தித்துப் பேசினார்.
தங்கள் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கும்படி சந்திரபாபு, கேஜ்ரிவாலிடம் கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். காங்கிரஸ், பாஜக., இல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் முதல்படியாகவும் அவரது நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



