
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை அடுத்து, சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஏப்ரல், மே மாதம் வந்தால், ஐபிஎல் சீஸன் என்று இளைஞர்களைக் கவர்ந்திழுக்க கிரிக்கெட் போட்டிகள் களை கட்டி விடுகின்றன. சரியாக தேர்வு நேரத்தில்தான் இது போன்ற கிரிக்கெட் போட்டிகள் வந்து, மாணவர்களின் படிப்பைக் கெடுக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அதுபற்றி எல்லாம் ஐபிஎல் போட்டியாளர்கள் கவலைப் படுவதில்லை.
இந்நிலையில், நாடு முழுதும் பல்வேறு பிரச்னைகளைச் சொல்லி போராட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக, அமைதிப் பூங்கா என்று சொல்லிச் சொல்லி பயங்கரவாதிகளின் கூடாராமாக மாற்றப்பட்டுள்ள தமிழகத்தில், அவ்வப்போது ஏதாவது ஒரு சாக்கை வைத்து, பிரிவினைவாதிகள் போராட்டங்களை முன்னெடுத்து வைக்கின்றார்கள். குறிப்பாக, இளைஞர்களை சேர்த்துக் கொண்டு, தமிழன் என்ற பொதுப் பெயரில் பிரிவினைவாதிகள் நடத்தும் போராட்டங்களால் மாநில அமைதி சீர்குலைந்து வருகிறது. அமைதிப் பூங்கா தமிழகம் என்ற நிலை போய், பதற்றமுள்ள மாநிலமாகவே மாறிவருகிறது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளால் போராட்டக் களம் திசை திரும்பி இளைஞர்களின் கவனம் கிரிக்கெட்டின் பக்கம் சென்று விடக் கூடாது என்று சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இன்னும் சிலரோ, காவிரிப் போராட்டம் தமிழகத்துக்கு நல்ல பலனைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக, போராட்டத்தின் நோக்கம் மாறி விடக் கூடாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பதென்னவோ, இளைய சமுதாயம்தான்!
இந்நிலையில், தமிழகத்தின் போராட்ட நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இது குறித்து ஐபிஎல் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி கூடாது என்றும், சென்னையில் நடக்கும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்ற பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது போல், சமூக பிரச்னைகளில் கருத்துகளைத் தெரிவித்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் பல விதங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், இந்த விசயத்தில் ஒரு வித்தியாசமான யோசனை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் கூறியிருப்பதாவது…
நான் சொல்வது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்., 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்., போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.
நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்த தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.
இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இது போல் பல குரல்கள் எழுந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னையில் எதிர்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் படக் கூடும் என்று கூறப்படுகிறது.



