
புது தில்லி: ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என ஆசைகாட்டி, பிட்காயினில் மூதலீடு செய்யுங்கள் எனக் கூவிக் கூவி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரூ.2,000 கோடிக்கும் மேல் சுருட்டிய தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே போலீசாரால்,தில்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அமித் பரத்வாஜ், பிட் காயினில் முதலீடு செய்ய பலரை உள்ளுக்குள் இழுத்தவர். நாட்டிலேயே முதல் முறையாக பிட்காயினை ஏற்றுக் கொள்ளும் வகையில் 2014ஆம் ஆண்டில் இணைய சில்லறை வணிகத்தை தொடங்கியவர். ஹாங்காங்கில் இருந்தும் பிட்காயின் தொழிலில் ஈடுபட்ட அமித் பரத்வாஜ், பின்னர் பிட்காயின் முதலீட்டில் மல்ட்டி-லெவல் மார்க்கெட்டிங் முறையை அறிமுகப்படுத்தினார்.

கெயின் பிட்காயின் என்ற பெயரில், பிட்காயினில் முதலீடு செய்தால் ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என அறிவித்ததால், அவரது பேச்சை நம்பி மும்பை, புனே, நாண்டெட், கோலாப்பூர் உள்ளிட்ட மகாராஷ்டிரத்தின் பல நகரங்களிலும் இருந்தவர்கள் பிட் காயினில் முதலீடு செய்து இப்போது மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.
சுமார் 8 ஆயிரம் பேர், ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்த நிலையில், அறிவித்தபடி 18 மாத ஒப்பந்தம் முடிந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு பணம் எதுவும் திரும்ப வரவில்லை. இதையடுத்து புனே உள்ளிட்ட 3 நகரங்களில் அமித் பரத்வாஜ் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் பரத்வாஜை புனே போலீசார் கைது செய்தனர். பிட்காயின் மோசடியில் அமித் பரத்வாஜின் கூட்டாளிகள் 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட தென் மாநில நகரங்களிலும் பிட் காயின் குறித்து ஆசை வார்த்தைகள் பரப்பப் பட்டன. இடையே, பிட்காயினில் மதிப்பு குறைந்துவிட்டது என்று ஒரு கதை வேறு கட்டிவிட்டார்கள். கண்ணுக்குப் புலப்படாத விர்சுவல் காயின் இது என்றும் சிலர் கதை அளந்தார்கள். இதை நம்பி பலரும், ஒன்றுக்குப் பத்தாகப் பணம் கிடைக்கும் என்று பலரிடம் வாய் வழியே பரப்பி வந்தார்கள். இப்போது பிட்காயின் சிக்கல் பலரை வாய்மூட வைத்திருக்கிறது.



