
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை நடத்துவதாகக் கூறி, திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டங்களை நடத்தின.
இந்தப் போராட்டங்களில், வன்முறை வெடித்தது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது. பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப் பட்டன. சாலையில் ஓடிய தனியார் வாகனங்களும் இந்தக் கல்வீச்சுக்கு தப்பவில்லை.
இதனிடையே, இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது 32 இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; தமிழகம் முழுவதும் 70 இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற போராட்டங்களில் 10 ஆயிரம் பெண்கள் உட்பட 85 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்ற வருடம் கர்நாடகாவில் தமிழகத்தின் வாகனங்கள், தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட லாரிகள், அடித்து நொறுக்கப் பட்டன. தமிழ் பேசிய ஓட்டுனர்கள் தாக்கப் பட்டனர். தமிழகத்துக்குச் சொந்தனமான தனியார் நிறுவன சொகுசு பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. இவற்றை எல்லாம் செய்தது கன்னட அமைப்பினர். ஆனால் இன்று, தமிழகத்தில் தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்களால், தமிழர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டதும், கடைகள் சூறையாடப் பட்டதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்ததும் மிகவும் வருந்தத் தக்க விஷயங்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.



