
சென்னை வடபழனியில் கோவில் குருக்களை கட்டிப் போட்டு அவரது மனைவியை கொலை செய்த மர்ம கும்பல், வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரபு. இவர், சிவன் கோவில் குருக்களாக பணி செய்கிறார். இவரது மனைவி ஞானப்பிரியாவுடன் (24) வாடகை வீட்டில் வசித்து வந்தார் பிரபு. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் பிரபு வீட்டுக்கு வெளியில் உள்ள கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கிடந்ததை வீட்ட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே பார்த்த போது, கதவு பூட்டப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை தள்ளிக் கொண்டு பிரியா, பிரியா என அழைத்தபடியே வீட்டுக்குள் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி மேலும் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞானப்ரியா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். அவரை யாரோ அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்த தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அங்கே பதட்டமான சூழல் ஏற்பட்டது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வடபழனி போலீசார் விரைந்து வந்தனர். உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் சந்த்ரு ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை அடுத்து கொலை செய்யப்பட்ட ஞானப்ரியாவின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பிரபு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கண் விழித்து என்ன நடந்தது என்பதைக் கூறினால் மட்டுமே விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகைக்காக ப்ரியா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் காணாமல் போயிருந்தது. நேற்று நள்ளிரவில் பிரபுவின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததும், பிரியாவை கொலை செய்ய முயன்ற போது தடுக்க வந்த பிரபுவை கட்டிப்போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து, விசாரித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



