பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அபூர்வவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையே ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளதாக ஜோத்பூர் சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு இன்று முதல் கைதிகளுக்கான சீருடை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சல்மான்கானின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியபோது ஜோத்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் மதிப்பதாகவும், அதே நேரம் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அல்லது ஜாமீன் வழங்கக்கோரி இன்று காலை 10.30 மணியளவில் ஹியரிங் நடத்த நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு மேல் தண்டனை கிடைத்துள்ளாதால் உடனடியாக மேல்முறையீடு மற்றும் ஜாமீன் நடவடிக்கை செய்ய முடியவில்லை என்பதும் அதனால் சல்மான்கான் சிறை செல்ல நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது