புதுதில்லி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தை தில்லி ராஜ்காட்டில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைக்க, மாநில தலைவர் அஜய் மக்கான் உள்ளிட்ட தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன் அஜய் மக்கான், லவ்லி உள்ளிட்ட தலைவர்கள் உணவகம் ஒன்றில் மூக்கு பிடிக்க ஒரு கட்டு கட்டினர். அவர்கள் உணவு உண்ணும் படங்கள் நேற்று டிவிட்டரில் சுத்தோ சுத்து என்று சுத்தின. இதனை பாஜக. தலைவர் ஹரிஷ் குரானா தனது டுவிட்டரில் வெளியிட்டு காங்கிரசாரை கிண்டல் செய்திருந்தார்.
‘வாவ்… நமது காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு மக்களை அழைத்துவிட்டு, அவர்கள் மட்டும் உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மக்களை அவர்கள் முட்டாளாக்கியுள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு காங்கிரஸார் படிலடி கொடுத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லவ்லி, ‘காலை 10.30க்கு தான் உண்ணாவிரதம் தொடங்கியது. இதற்கான தயாரிப்புகளில் நேற்று நள்ளிரவு வரை நாங்கள் ஈடுபட்டு இருந்தோம். பின்னர் காலை உணவை உண்டோம். போராட்டத்துக்கு முன் உணவு உண்டதில் எந்தத் தவறும் இல்லை’ என்றார்.




