நீரவ் மோடியை இந்தியா கைது செய்ய ஹாங்காங் நடவடிக்கை மேற்கொள்வதற்கு சீனா உதவும் என்றும், இந்திய அரசு முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் சட்ட விதிகளுக்குட்பட்டு நீரவ் மோடியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு முறைகேடு செய்து, வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி. அவருடன் சேர்ந்து, இந்தப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட அவரது உறவினர்களையும் கைது செய்ய, சிபிஐ வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மத்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நீரவ் மோடி, தற்போது ஹாங்காங்கில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், `சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஹாங்காங் அரசிடம் நீரவ் மோடியை கைது செய்ய கோரிக்கையை வைத்துள்ளோம்’ என்றார்.
இதன் பின்னணியில் மார்ச் 23ஆம் தேதி இந்தியாவின் சார்பில் ஹாங்காங் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஹாங்காங் அரசுடன் இந்திய அரசு ஏற்கெனவே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. எனினும் இதுதொடர்பாக ஹாங்காங் சீனாவிடம் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
இந்நிலையில், நீரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறைப்படி கோரிக்கை வைத்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ந்டவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று கூறியுள்ள சீனா, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹாங்காங் நடவடிக்கை எடுக்கலாம் என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.




