பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஆசிரியர்கள் இருவர் கைது

இந்தியா

புவனேஸ்வர்: ஒடிசாவில் பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ளது கோராபுட் மாவட்டம். இங்குள்ள உமுரி நகரில் ஆசிரம பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், இதனை வெளியில் தெரியாமல் பள்ளியின் தலைமை ஆசிரியரும், விடுதி கண்காணிப்பாளரும் மறைத்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி விடுதியிலேயே மாணவிக்கு குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பள்ளி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த செமிலிகுடா போலீசார், குழந்தையையும், மாணவியையும் ஜீப்பில் கொண்டு போய் மாணவியின் பெற்றோர் வசிக்கும் உப்பர்கண்டியில் போய் விட்டு வந்தனர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு தலைமை ஆசிரியர் கைலாஷ் வர்மா மற்றும் விடுதி கண்காணிப்பாளர் சபிதா குரு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த மாதம் 23ம் தேதி 10ம் வகுப்பு மாணவி ஒருவர் லிங்ககடாவில் பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மாணவியின் பிரசவம் விடுதியில் நடந்திருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.