
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட விவகாரம், உ.பி. மாநிலத்தில் பாஜக., எம்.எல்.ஏ., மீதான இளம்பெண் பலாத்கார குற்றச்சாட்டு ஆகிய சம்பவங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் மோடி. அப்போது அவர், கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் நாகரிக சமுதாயத்தின் அங்கமாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவங்கள் வெட்கக்கேடானவை என்று வேதனையுடன் குறிப்பிட்ட பிரதமர் மோடி, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் ஒருக்கால்லும் தப்ப இயலாது என்று உறுதிபடக் கூறினார். முழுமையாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நம் மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் பிரதமர் உறுதி கூறினார். இந்த சமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த சமூக மாற்றம் நம் குடும்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.



