
மதுரை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் நடந்த போராட்டத்தின் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வைகோ பேசிய பேச்சை செய்தி டிவி.,க்களில் கேட்டு மனமுடைந்து விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனளிக்காத நிலையில், மதுரையில் இன்று உயிரிழந்தார்.
வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் சரவணன் சுரேஷ். இவர் வைகோவுடன் நிழலாக இருந்து கொண்டு, அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். காவிரிக்காக நடத்தப் பட்ட போராட்டங்களில் வைகோவின் பேச்சுகளைக் கேட்டு மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். தொடர்ந்து, அவருடன் போராட்டங்களில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அந்த ஆலையிடம் இருந்து வைகோ கமிஷன் வாங்கிவிட்டதாக, நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட சிலர் சமூக இணையதளங்களில் மீம்ஸ்களைப் போட்டிருப்பது கண்டு, சரவணன் சுரேஷ், வைகோவிடம் வருத்தப் பட்டுக் கூறியுள்ளார். அதற்கு அவர் சரவணனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாராம்.
இதனால் ஏற்கெனவே மனச் சோர்வில் இருந்த சுரேஷ், வைகோ செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து, மோடி நீ ஒரு கோழை என்று ஒருமையில் பேசி, தைரியம் இருந்தால் ஹெலிகாப்டரிலேயே பறக்காமல் சாலை வழியாக வந்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக் கண்டு செல் என்று வைகோ பேசிய பேச்சைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாராம். இதனால், நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்வதாகக் கூறி விருதுநகர் விளையாட்டு மைதானத்துக்கு சென்றவர், அங்கே யாரும் எதிர்பாராத வகையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக, அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயம் அடைந்த சரவணன் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1 மணி அளவில் சரவணன் சுரேஷ் உயிரிழந்தார்.
நியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் கிளம்பிய போது, மதுரையில் வைகோவின் மிக நெருங்கிய தொண்டர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று வைகோ வருந்திக் கேட்டுக் கொண்டார்.



