விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக விஷ்ணு சதாசிவ் கோக்ஜே தேர்வு செய்யப் பட்டுள்ளார். அந்த அமைப்பில், 54 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றது. அதில், விஷ்ணு சதாசிவ் கோக்ஜே 131 வாக்குகள் பெற்றார். இதை அடுத்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவராகிறார் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே. பல ஆண்டுகளாக இருந்த பிரவீன் தகோடியாவின் சகாப்தம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
வி.ஹெச்.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மத ஆன்மிக அமைப்பாக, அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கரால் தொடங்கி வைக்கப் பட்டது. சுவாமி சின்மயானந்தர் ஆசியுடன் எஸ்.எஸ்.ஆப்தே உடன் இருந்து இந்த அமைப்பு 29-8-1964 அன்று தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம், ஆன்மிக ரீதியில், இந்து மக்களை ஓரணியில் திரட்டி, இந்து தர்மத்தை பாதுகாப்பது.
இந்த அமைப்பு, கோயில்களை கட்டுதல், புனரமைத்தல், பசு வதைத் தடை, பசுவைப் பாதுகாத்தல், இந்துக்களை மதமாற்றம் செய்வதைத் தடுத்தல், வேற்று மதங்களுக்குச் சென்றவர்களை தாய் மதம் திரும்பச் செய்தல், பிற சமயத்தவரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இந்து மத வழிபாட்டு இடங்களை மீட்டல், அங்கே மீண்டும் வழிபாட்டு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட மதம் தொடர்புடைய ஆன்மிகச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வேறு பெயர்களில் கிளைகள் உள்ளன. சுமார் 70 லட்சம் பேர் இந்த அமைப்பில் தீவிர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் இந்த அமைப்பு ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. கிராமக் கோயில்களில் உள்ள பூஜாரிகளை ஒருங்கிணைத்தல், அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தல் உள்ளிட்ட சேவைப் பணிகளைச் செய்து வருகிறது.
இதன் சர்வதேச தலைவராக இருந்து வந்த பிரவீன் பாய் தொகாடியா, அண்மையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இவர் வகித்து வந்த தலைவர் பதவியில் புதிய நபரை நியமிக்க நடைபெற்ற ஆலோசனையில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் போனது. இதனால், சுமுகமாக புதிய நபரை நியமனம் செய்யும் வழக்கத்துக்கு மாறாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக குர்கான் நகரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பங்கேற்கும் தகுதிபெற்ற 192 உயர்மட்ட பிரதிநிதிகள் வாக்களித்தனர்.
இதில், இமாச்சலப் பிரதேச மாநில முன்னாள் ஆளுநர் வி.எஸ். கோக்ஜே 131 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராகவா ரெட்டி 60 வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக கோக்ஜே தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.