
அன்று ஏப்ரல் 14, 1950, வெள்ளிக்கிழமை.
ரமணாச்ரமத்தில் அன்றும் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றியுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்து கண்ணீருடன் பகவானை தரிசித்துச் சென்றனர். முற்பகல் நேரம். தனக்கு உதவியாக இருந்த தொண்டர் ஒருவரிடம் பகவான் முகமலர்ச்சியுடன் “தாங்க்ஸ்” என்றார். எழுதப் படிக்கத் தெரியாத அந்த பக்தர், அதன் பொருள் புரியாது பகவானைப் பார்க்க அவர், “அதுதான் ஓய்! சந்தோஷத்தைத் தெரிவிப்பதற்கான இங்க்லீஷ் வார்த்தை. ரொம்ப நன்றி என்றர்த்தம்” என்றார்.
மதிய நேரத்தில் ஆச்ரமத்து மயில்கள் திடீரென்று அகவ ஆரம்பித்தன. அதைக் கேட்ட ரமணர், அவற்றிற்கு உணவு கொடுத்தாகி விட்டதா என்று விசாரித்தார். ‘ஆம்’ என்பது தெரிந்ததும், “பின் ஏன் அவை கத்துகின்றன?” என்று கேட்டார்.
பகவானை அன்று முழுவதும் வெளியே காணாத மயில்கள், எப்படியோ அவர் இருக்குமிடம் அறிந்து, அவர் இருந்த அந்தச் சிறிய அறையின் வாசல்புறத்தே வந்து நின்றன. பகவானின் கருணைப் பார்வை அவற்றிற்கும் கிடைத்தது.
மாலையாயிற்று. படுக்கையில் சாய்ந்த நிலையிலிருந்த தம்மை நேராக உட்கார வைக்கும்படி தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அமர்த்தப்பட்ட சிலமணித் துளிகளில் அவருக்கு மூச்சு விடக் கஷ்டமாயிற்று. உடனே மருத்துவர், அதற்கான கருவியை மூக்கில் வைக்க ஆயத்தமானபோது, தமது கையால் அசைத்து அதனை மறுத்தார். பின் கண்களை மூடிக் கொண்டார். அப்படியே சில நிமிடங்கள் கழிந்தன.
அது ஒரு சிறு அறை என்பதால் மருத்துவரும், ஆச்ரமப் பணியாளர்களுமாக ஒரு சிலர் மட்டுமே அந்த அறையில் இருக்க முடிந்தது. பிறர் வெளியே குழுமி பகவானையே பார்த்துக் கொண்டிருந்தனர். பரிபூரண அமைதி எங்கும் நிலவியது.
பக்தர் ஒருவர் பகவான் இயற்றிய அக்ஷரமண மாலையைப் பாட ஆரம்பித்தார். கூடவே பிற பக்தர்களும் இணைந்து பாடத் துவங்கினர்.

அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
அழகுசுந்தரம் போல் அகமும் நீயுமுற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
– குரல் எங்கும் ஒலித்தது.
பாடல் கேட்டு மூடியிருந்த தம் கண்களை மெள்ளத் திறந்து பார்த்தார் பகவான் ரமணர். அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. பின் மெள்ளக் கண்களை மூடிக் கொண்டார். சில நிமிடங்களில் ஆழமான மூச்சு ஒன்றன் பின் ஒன்றாய் வெளிப்பட்டது. அருகில் நின்றவர்கள் அடுத்த மூச்சை எதிர்பார்த்து நிற்க, உள்ளே சென்ற மூச்சுக்காற்று இதயத்திலேயே நின்று, மூலத்திலே சென்று ஒடுங்கி, ஆன்மாவில் நிலைத்தது.
ரமணர் மஹா சமாதி அடைந்தார்.
அப்போது நேரம் இரவு மணி 8.47.
பகவான் மஹா சமாதி அடைந்த அதே நேரத்தில் வானில் பகவானது அறையின் மேல் புறத்தில் பிரகாசமிக்க ஒளியொன்று தோன்றி அருணாசல மலையை நோக்கி வேகமாகச் சென்று மறைந்தது.
ரமணரின் தாயார் அழகம்மை ரமணரைப் பிரசவிக்கும்போது பார்வையற்ற ஒரு கிழவி உடனிருந்தாள். அவள் ரமணர் அருட் குழந்தையாக அவதரிக்கும்போது சில நிமிடங்கள் மட்டும் ஒரு “பேரொளி”யைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். திருச்சுழியில் அன்று தோன்றிய அப்பேரொளி, திருவண்ணாமலையை நாடி வந்து, வாழ்ந்து, வளர்ந்து இறுதியில் அதனுடனேயே இரண்டறக் கலந்து ஒன்றானது.
அது மானுட குலம் உய்ய வழியானது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
தகவல்: அரவிந்த் சுவாமிநாதன்



