திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காத்திருப்பு அறைகளில் வெகு நேரம் கழிப்பவர்களுக்கு, இனி பொங்கல், உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகளுடன் சட்னியும் வழங்கப்படும். இந்த சேவையை தமிழ் வருடப் பிறப்பான விளம்பி ஆண்டு தொடங்கிய நாளில் தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.
பொதுவாகவே திருப்பதியில் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். தற்போது தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தேவஸ்தானம் விரைவில் நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் 24 மணி நேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால், மோர் என பலவற்றையும் வழங்கி வருகிறது. பெருமாளை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்களுக்கு, காத்திருப்பு அறைகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும் அன்னதானம், சிற்றுண்டி ஆகியவை வழங்கப் படுகின்றன.
இதனிடையே பக்தர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும் போது, தங்களுக்கு வெறும் பொங்கல், ரவை, சேமியா உப்புமா ஆகியவற்றை வழங்கும்போது அதனுடன் சேர்த்து சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தேவஸ்தான நிர்வாகம், தமிழ் வருடப் பிறப்பான சனிக்கிழமை இரவு முதல் பொங்கல் மற்றும் உப்புமாவுடன் வேர்க்கடலை சட்னி வழங்கத் தொடங்கியுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கையை பக்தர்கள் வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.




