புது தில்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் சி.பி.எஸ்.இ. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை, வரும் மே 6ஆம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.
இந்தத் தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. கூறியிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 9ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்தது. இந் நிலையில், தற்போது, நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ., அறிவித்துள்ளது.
டவுன்லோட் செய்த ஹால் டிக்கெட்டில், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, தேர்வறைக்குக் கொண்டு வர வேண்டும்.




