ஆளுநர் என்ற மரியாதை இல்லாமல் கேள்வி கேட்பதா? என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆனார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்தும், ஆளுநர் மாளிகை மீது சுமத்தப் படும் குற்றச்ச்சாட்டு குறித்தும் விளக்கம் அளிக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவரைத் துளைத்து எடுத்தனர்.
முதலில் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தார் ஆளுநர். “நிர்மலா தேவியின் முகத்தைக்கூட இதுவரை பார்த்ததில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். என்னைப் பற்றி தவறான கருத்துகளைப் பேச வேண்டாம்” என்றெல்லாம் பொறுமையாக பதிலளித்து வந்தவர், நிருபர்களின் மரியாதைக் குறைவான அபத்தமான கேள்விகளால் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆனார்.
“ஆளுநர் என்ற மரியாதை இல்லாமல் கேள்வி கேட்கிறீர்கள். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது, முட்டாள்தனமானது” என்று கோபமாகப் பதிலளித்தார் ஒரு கட்டத்தில்.
பின்னர் பொறுமையாக, “ என்னைப் பற்றி நீங்களும் விசாரிக்கலாம்.. என் வாழ்க்கை வெளிப்படையானது. குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்படாமல், எனது பணியை தொடர்ந்து சட்டத்துக்குட்பட்டு செய்து வருவேன்” என்று பதிலளித்தார் ஆளுநர் புரோஹித்.



