
புதுதில்லி: நற்பெயரைக் கெடுக்கும் வகையில் சர்ச்சை பேச்சுகள் வேண்டாம் என்றும், அதனால் பா.ஜ.க,வின் பெயர் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி பாஜக.,வினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பா.ஜ., தலைவர்கள் சிலரின் பேச்சுக்கள் காரணமாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நரேந்திர மோடி, மொபைல் போன் ஆப் வழியாக, பா.ஜ.,வினர் மற்றும் எம்.பி.,க்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
சிறந்த சமூக விஞ்ஞானிகள் மற்றும் பிரச்னைகளை அலசி ஆராயும் நிபுணர்கள் என நம்மை நாம் நினைத்துக் கொண்டு தவறுகள் செய்து மீடியாவுக்கு செய்தி கொடுக்கிறோம். கேமராவைப் பார்த்த உடனே பேசத் துவங்கி விடுகிறோம். இதனால், அரைகுறையான பேச்சுகள் பரவி வருகின்றன.
இதனால், பேசுபவர்களின் மதிப்புக்கும்ம். கட்சியின் நற்பெயருக்கும் மதிப்புக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சர்ச்சைப் பேச்சுகள் எதுவும் பேச வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுதும் ஊடகங்களால் பாஜக.,வினர் பேசுவது சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோரின் பேச்சுகள் பெருமளவு சர்ச்சை ஆக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அரசின் பொறுப்பில் தாம் இருப்பது போல், அவராகவே பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று உறுதிபடக் கூறி வருகிரார். அவரது பல பேட்டிகள் இவ்வகையில் தமிழக ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் மோடியின் அறிவுரை தமிழக பாஜக.,வினருக்கும் சேர்த்து ஓர் அறிவுரைதான் என்றே கருதப் படுகிறது.



