கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் அமரப் போவது யார்? என்பதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது.
கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் மிக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் சித்தராமையா 224 தொகுதிகளையும் சுற்றி வந்து பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளர்கள், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சோனியாவும் தேர்தல் பிரசாரத்தில் குதித்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.
காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, அமித்ஷா, எடியூரப்பா ஓட்டு வேட்டையாடினார்கள். பிரதமர் மோடி 25-க்கும் மேற்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இன்று தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளனர்.
நாளை வாக்காளர்களுக்கு சிலிப் வழங்கும் பணி நடைபெறும். அன்று வாக்காளர்களுக்கு முக்கிய கட்சிகள் சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வரும் 12-ந்தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தற்போது கத்திரி வெயில் காலம் என்பதால் பெரும்பாலும் மதியத்துக்குள் அதிக அளவு வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது.
அதன் பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். 15-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் 223 தொகுதிகளின் முடிவு 15-ந்தேதி மதியத்துக்குள் தெரிந்து விடும்.



