
- மும்பையில் 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் ஒரு முக்கியப் பங்காற்றியதை ஒப்புக் கொண்டுள்ளார் நவாஸ் ஷெரீப்.
- பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ‘சுதந்திரப் போராளிகள்’ என்று குறிப்பிட்ட ஷெரீப், 2008 மும்பை தொடர் தாக்குதலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
- ரஷ்ய, சீன அதிபர்கள் பாகிஸ்தானிடம் உள்ளூர் பயங்கரவாதிகள் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறியுள்ளார் ஷெரீப்.
இஸ்லாமாபாத்: மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அனுப்பி வைத்ததாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, மும்பையில் தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் மும்பையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கஸாப் என்ற பயங்கரவாதி, உயிருடன் பிடிபட்டான். அவன் மீது விசாரணை நடைபெற்றதில், பாகிஸ்தானின் பங்களிப்பு இந்தத் தாக்குதலில் இருந்ததை அவன் தெரிவித்தான். அதன் பின்னர் அஜ்மல் கஸாப் தூக்கிலிடப்பட்டான்.
இந்நிலையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானே முக்கியப் பங்காற்றியுள்ளது என்று இந்தியா புகார் கூறியது. ஆனால் இதனை ஏற்க மறுத்து, தொடர்ந்து மறுத்து வந்தது பாகிஸ்தான்.
மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒன்று, பாகிஸ்தானில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரபல டான் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை போராளிகள் என்கிறோம் நாம். அவர்கள்தான் எல்லை தாண்டிச் சென்று மும்பையில் 160 பேரைக் கொன்றனர். அதை நாம் அனுமதிக்க வேண்டுமா? இதற்கு விளக்கம் தேவை. ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில், மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் விசாரணை ஏன் இன்னும் முடிவடையவில்லை? இந்த விசாரணையை நாம் ஏன் இன்னும் முடிக்கவில்லை? இது முற்றிலும் ஏற்கத் தக்கதே அல்ல. இதில்தான் நாம் பிரச்னையை சந்திக்கிறோம். ரஷ்ய அதிபர் புதின் இதைச் சொல்லியிருக்கிறார். சீன அதிபர் ஜீ ஸின் பிங் இதை சொல்லியிருக்கிறார் என்றார் அவர்.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையீத், மசூத் அசார் ஆகியோர் பெயர்களையும், ஜமாத் உத் தவா, ஜெய்ஸ் இ மொகம்மத் ஆகிய இயக்கங்களின் பெயர்களை நவாஸ் ஷெரீப் குறிப்பிடாமல் இதனைக் கூறியுள்ளார்.
68 வயதான நவாஸ் ஷெரீப், அண்மையில் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கினால் பதவியை இழந்தார். தொடர்ந்து கடந்த பிப்ரவரியில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் செயல்படுவதில் இருந்து நீக்கி, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் இரண்டு அல்லது மூன்று இணையான அரசாங்கங்கள் செயல்படும் நிலையில் ஆட்சி செய்ய இயலாது என்று குறிப்பிட்ட ஷெரீப், இதை நிறுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அதிகார அமைப்பு மட்டுமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று, ராணுவ அமைப்பு, நீதி அமைப்பு ஆகியவற்றையும் குறிப்பிட்டு சாடியிருக்கிறார் ஷெரீப்.
வாஜ்பாய் அரசு பதவி ஏற்றதும் பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் காட்டி லாகூருக்கு பஸ் விட்டார். பதிலுக்கு பாகிஸ்தான் கார்கில் பகுதியில் ராணுவத்தை அனுப்பி போருக்கு வழிவகுத்தது.
மோடி பிரதமராகப் பதவி ஏற்றதும் சொல்லாமல் கொள்ளாமல் பாகிஸ்தானில் திடீரென இறங்கி, நவாஸைப் பார்த்து நலம் விசாரித்தார். இன்னொரு முறை, அவர் தாயாருக்கு புடவை எல்லாம் கொண்டு போய் பரிசளித்து ஆசி பெற்றார். ஆனால் பதிலுக்கு பாகிஸ்தான் வாலாட்டுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
இப்போது மோடியின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப் பட்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தால் அது தனிமைப் படுத்தப் பட்டு வருகிறது. அது நவாஸின் வாயில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நெருக்கமான ரஷ்யாவும், சீனாவுமே நவாஸிடம் பயங்கரவாத முகம் குறித்து கேள்வி எழுப்பியதை இப்போது அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் இந்தியா சுமத்த்திய குற்றச்சாட்டை மறுத்து வந்த பாகிஸ்தான், இனி என்ன செய்யப் போகிறது?!



