
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற இலக்கை நோக்கி அரசியல் களத்தில் இயங்கி வரும் அமித் ஷாவின் அரசியல் தந்திரங்கள், கர்நாடகத்தில் எந்த அளவுக்கு எடுபடப் போகிறது என்பது அடுத்த இரு தினங்களில் தெரிந்து விடும். இருந்தாலும், தனது ஒரு இலக்கு முடிந்து விட்ட திருப்தியுடன், அடுத்த இலக்காக தமிழகத்தை நோக்கிக் குறி வைத்துள்ளார் அமித்ஷா என்கின்றனர் பாஜக.,வினர்.
தமிழகத்தில் பாஜக., வளராத கட்சியாக, தேய்ந்து கொண்டே வருகிறது என்பது தமிழகத்தில் பாஜக., அபிமானிகளின் கருத்தாக உள்ளது. தனித்துப் போட்டியிட்டு குமரியில் ஒரு எம்.எல்.ஏ.,வும் கோவை உள்ளிட்ட சில இடங்களில் கணிசமான வாக்கு வங்கியும் கொண்டிருந்த கட்சி, தற்போது தேய்ந்து கொண்டே வந்துள்ளது என்று புகார்கள் கூறப் படுகின்றன. அதற்கு கட்சியில் உள்ள மாநிலத் தலைமை, ஊடகப் பின்புலம் இல்லாமை, கோஷ்டிப் பூசல்கள், சாதி ரீதியாக கட்சியை அவரவர் வளைத்துப் போட்டுள்ளது, அவரவர் சாதிக்காரர்களுக்கு முன்னுரிமை, மக்களை ஈர்க்கும் வகையில் தலைவர் எவரும் இல்லாதது என்று பல காரணங்களை அடுக்கி வருகின்றனர் தலைமையிடம்!

இத்தகைய பின்னணியில்தான், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை முன்வைத்து காய்களை நகர்த்தி வருகிறது தேசியத் தலைமை. தமிழகத்தில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட குமரி புயல் பேரிடர், தேனி குரங்கனி மலை தீவிபத்து ஆகியவற்றின் போதான நிர்மலா சீதாராமனின் அணுகுமுறை, ராணுவ கண்காட்சி, மத்திய திட்டங்கள் ஆய்வு என்ற வகையில் சாமானியர்களுடனான அவரின் பரிமாற்றம் என்று களத்தில் இறக்கி விட்டு ஆழம் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிந்த சூட்டோடு, தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க, பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து தமிழக பாஜக., தலைவர்கள் சிலரிடம் அமித் ஷா பேசத் துவங்கியுள்ளார். தமிழகத்தில், கட்சியை வேகமாக வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில் களம் இறங்கியுள்ள அமித்ஷா, விரைவில் தமிழகம் வந்து கட்சித் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.
தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க இதுவரை தமிழக தலைவர்கள் முன்வைத்திருக்கும் தகவல்களை நேரடியாகப் பெற்று, அவற்றை பரிசீலிக்க உள்ளார். தொடர்ந்து, இங்கிருக்கும் அரசியல் சூழல், யாரை வைத்து தொடர்ந்து கட்சி அரசியலை நடத்துவது என பலவற்றையும் ஆலோசிக்க உள்ளாராம். இதனை பாஜக., மூத்த தலைவர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்கின்றனர்.

ஒருபுறம் ரஜினி, ஆன்மிக அரசியலை முன்னெடுத்து வைக்க, தனிக்கட்சி துவங்கி பாஜக.,வுடன் கூட்டணி வைக்கலாமா என்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்க, இன்னொரு புறம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாங்கள் ஒன்றும் ரஜினியுடன் கூட்டணிக்கு அலைந்துகொண்டிருக்கவில்லை என்று கூறி பின்னணி அரசியலை அடக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.



