பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். தற்போதைய நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்பில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதை அடுத்து, இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமாக் கடிதத்தை வழங்குகிறார் முதலமைச்சர் சித்தராமையா.
இதனிடையே, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், குமாரசாமி முதல்வராகப் பதவியேற்க தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அது கூறியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுத் தரவும், மஜதவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதற்கு ஏற்ப, சோனியா காந்தி, தேவேகௌடவுடன் பேசியுள்ளார். இதை அடுத்து, இந்த வியூகம் வகுக்கப் பட்டுள்ளது.
இதுவரையிலான முன்னிலை நிலவரங்களில், பாஜக – 106, காங்.,-74, மஜத-40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. எனவே தற்போதைய சூழ்நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தாங்கள் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்றும், கூட்டணி ஆட்சிக்கு சம்மதமும் தெரிவித்து விட்டது.




