இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நேற்று தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிய பாகிஸ்தான் ராணுவம், இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீரில் தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு, அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தான் படை. அதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்த வீடியோவையும் வெளியிட்டது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் ஜம்முவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமைத் தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது. இதனை இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர். இதை அடுத்து இந்தியப் படையினர் தாக்குதலை நிறுத்தினர்.
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், ஜம்முவின் ஆர்னியா பகுதியில் உள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. அதற்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.





