பெங்களூர்: கர்நாடகாவின், 24 ஆவது முதல்வராக மஜத.,வின் குமாரசாமி பதவியேற்றார். துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றார்.
கர்நாடக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான் சௌதா வளாகத்தில் பதவியேற்பு விழா புதன்கிழமை இன்று மாலை 4.30க்கு நடைபெற்றது. கர்நாடக முதல்வராக, மஜத.,வின் குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்ந்து துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரா பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் குமாரசாமியின் தந்தை தேவேகௌடா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காங்கிரஸ் – மஜத., கூட்டணி அரசு, கர்நாடக மக்களின் மேம்பாட்டிற்காக ஒற்றுமையாக பாடுபட்டு, சிறப்பான ஆட்சியை வழங்கும் என்றார்.
தன் பதவியேற்பு விழாவில், நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக பங்கேற்றிருப்பதாக தெரிவித்தார் குமாரசாமி. இதன் மூலம் தாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் என்றார். இது 2019க்கான மாற்றம் என்று குமாரசாமி தெரிவித்தார்.




