புது தில்லி: இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடி, கடந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவை மாற்றும் பணிக்கான பயணத்தை தாங்கள் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது, துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள மோடி,, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பங்கு பெற்றிருப்பதாக ஒவ்வொரு குடிமகனும் உணர்கிறான் என்று கூறியுள்ளார். 125 கோடி இந்தியர்களும் இணைந்து, இந்தியாவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
I bow to my fellow citizens for their unwavering faith in our Government. This support and affection is the biggest source of motivation and strength for the entire Government. We will continue to serve the people of India with the same vigour and dedication.
— Narendra Modi (@narendramodi) May 26, 2018
பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு தலை வணங்குவதாகக் கூறியுள்ள மோடி, இந்த அன்பும் ஆதரவுமே ஒட்டுமொத்த அரசின் வலிமை மற்றும் ஊக்கத்திற்கு பெரும் ஆதாரமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இருப்பதாக உறுதி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி, தங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே முதன்மை; புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் முடிவுகளை சிறந்த நோக்கம் மற்றும் நேர்மையுடன் எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
On this day in 2014, we began our journey of working towards India’s transformation.
Over the last four years, development has become a vibrant mass movement, with every citizen feeling involved in India’s growth trajectory. 125 crore Indians are taking India to great heights!
— Narendra Modi (@narendramodi) May 26, 2018
இது குறித்து மத்திய அரசின் சார்பிலும் அறிவிப்பு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பயிர்க் காப்பீடு, குறைந்த பட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்திற்கு ஈடான சொத்துக்களைக் கைப்பற்றும் வகையில் வரி ஏய்ப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. பினாமி சொத்து சட்டத்தின் மூலம் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய சட்ட ரீதியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடு திட்டம், ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு, கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு கோடி ஏழைகள் வீடுகளைப் பெறும் திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏழரை கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டது, ரூ. 2 லட்சம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப்படுதல், கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கி.மீ., ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது, என இந்த நான்கு ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.




