தன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி

இதனால் எல்லாம் அரசு கவிழாது. இதனை ஒரு கௌரவ பிரச்னையாகப் பார்க்காமல், ஒரு பிரச்னையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்க முயற்சி செய்வேன்.

பெங்களூர்: தன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன் என்று கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் குமாரசாமி கூறியுள்ளார். மேலும்,   அரசில்  காங்கிரஸுடன் அமைச்சரவையில் இடம் பிரிப்பதில், தகுந்த இலாகாக்களைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்னை உள்ளது என ஒப்புக் கொண்டுள்ளார் குமாரசாமி.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை உள்ளது. அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால்  இதனால் எல்லாம் அரசு கவிழாது. இதனை ஒரு கௌரவ பிரச்னையாகப் பார்க்காமல், ஒரு பிரச்னையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்க முயற்சி செய்வேன். என் தன் மானத்தை  இழந்து பதவியில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

கர்நாடகத்தில்  அமைச்சரவை பங்கீடு தொடர்பாக காங்கிரஸ்,  மஜத., தலைவர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முடிவு எடுதும் எடுக்கப்படவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இனறைய பேச்சுவார்த்தையில் பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தபோது குமாரசாமி, ராகுலுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். முதல் கட்டமாக 16 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். அதில் இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.