மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முஸ்லிம் பிரிவு சார்பில் முதல் முறையாக ‘இப்தார்’ விருந்து அளிக்கப்படுகிறது.
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் முஸ்லிம் மக்களுக்கு இப்தார் விருந்து அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் தமது முஸ்லிம் பிரிவான எம்.ஆர்.எம்., எனப்படும் ‘முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்’ மூலம், இப்தார் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து எம்.ஆர்.எம்., தேசிய ஒருங்கிணைப்பாளர் விராக் பச்போரே கூறியபொது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் ஜூன் 4ல் மும்பையில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தில் பங்கேற்கும்படி 30 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் 200 முக்கிய முஸ்லிம் பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இதர சமுதாயத்தைச் சேர்ந்த 100 பேர் இந்த விருந்தில் பங்கேற்பார்கள். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில், அமைதி, நம்பிக்கை, தேசபக்தி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தவே விரும்புகிறது என்றார் அவர்.
ஏற்கெனவே கடந்த வருடம் உ.பி.யில் ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் மூலம் இப்தார் விருந்து அளிக்கப்பட்ட போது, பாலும் பால் பொருள்களும் வழங்கி, சைவ இப்தார் விருந்து வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய அளவில் சர்ச்சையானது.




