சென்னை: கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது. இதை அடுத்து வழக்கம்போல் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப் பட்டது. மே 31ம் தேதி இன்றுடன் கோடை விடுமுறை முடிவடைகிறது. இந் நிலையில் தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வாகனங்களை சரியாக பராமரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் படி, கடந்த இரு நாட்களாகவே பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களும் முன்னேற்பாடுகளைச் செய்து வந்தனர்.
பள்ளிகள் திறக்கப் படும் முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளின் நிறங்கள் மாற்றப்பட்டுள்ளன.
- தொடக்க வகுப்புகளுக்கான சீருடை கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம்பச்சை நிற மேல் சட்டையும் கொண்டதாக இருக்கும்.
- 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான சீருடை சாம்பல் நிறத்தில் முழுக்கால் சட்டை, இளஞ்சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டை என மாற்றப்படுகிறது.
- மாணவிகளுக்கு கூடுதலாக சாம்பல் நிற கோட் சீருடையாக இருக்கும்.
- 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சீருடை கருநீல வண்ணத்தில் முழுக்கால் சட்டை, கருநீல வண்ணத்தில் கோடிட்ட மேல்சட்டை என மாற்றப்படுகிறது.
- மாணவிகளுக்கு கூடுதலாக கருநீல கோட் சீருடையாக இருக்கும்
- இந்த ஆண்டு 1, 6, 9, மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




