ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜரானார்.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டுள்ளார்
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்ய தடை கோரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ப.சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உள்ளது. இவ்வழக்கை மீண்டும் ஜூன் 5ம் தேதி விசாரிக்க இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் ப.சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை விதித்தது.



