சென்னை: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம் என அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 2019 ஜனவரி முதல் பால், தயிர், எண்ணெய் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இது பற்றி பேசிய அவர் மழைநீர் கால்வாய்களை அடைத்து வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் முக்கிய காரணமாக இருப்பதுவும் குறிப்பிட்டார்.
மேலும் மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் கூடாது என்று பேரவையில் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார் பழனிசாமி.
இதில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடும் மாசுபாடு ஏற்படுவதால், தமிழகத்தில் 2019, ஜனவரி 1ஆம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஷ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் மற்றும் தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டின் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ் தடை செய்ய அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் இந்த பொருட்களை தடை செய்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.




