காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தற்காலிகத் தலைவராக மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன.
உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அது குறித்த அரசாணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில் மத்திய நீர் ஆணையத் தலைவரான எஸ். மசூத் ஹுசேனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தற்காலிகத் தலைராக நியமித்து மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார் என்றும், விரைவில் நிரந்தர தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி, யுபி.சிங் அந்தப் பொறுப்பை கவனித்து வந்த நிலையில் தற்போது, மசூத் ஹுசேனை தற்காலிக தலைவராக நியமித்து யு.பி.சிங் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பகுதிநேர உறுப்பினராக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார் ஆகியோரை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்திருந்தது.





