ஹைதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆந்திர போலீசார் வழக்கு விசாரணைக் கோப்புகளை அளித்தனர். அதில், ஏப்.14 ஆம் தேதிக்குப் பின்னர் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாதது கவலையளிப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், விசாரணை நடத்தும் போலீசார், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் ஆலோசனை பெறாமல், சுதந்திரமாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். காவல்துறை அதிகாரி ரவிசங்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு ஏன் விசாரணையைத் தொடங்கவில்லை என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், அடுத்த 60 நாட்களுக்குள் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட ஹைதராபாத் உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
ஆந்திர என்கவுண்டர்: 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari