காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழகமும், புதுச்சேரியும் பிரதிநிதிகளை நியமித்த பின்னரும், கர்நாடகம் இன்னும் மௌனமாக இருந்து, ஆணையப் பணிகளை தாமதப் படுத்தி வருகிறது. இதை அடுத்து, பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. அதே நேரம், கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், பாஜக., தோற்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் காவிரி விவகாரத்தை எழுப்பி நெருக்கடி கொடுத்து தீவிர வன்முறை அரசியலில் ஈடுபட்ட திமுக., உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள், இப்போது வாய்மூடி, தங்கள் வேலை முடிந்துவிட்டது போல் மௌனமாகக் கிடக்கின்றன.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானதை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அரசிதழில் அதிகார பூர்வமாக வெளியிட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கான பிரதிநிதிகளின் பட்டியலை அறிவிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
இதை அடுத்து, தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகளின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டனர். இந் நிலையில், கர்நாடகா மட்டும் இதுவரை பிரதிநிதிகள் பெயரை அறிவிக்கவில்லை. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் பணிகள் தாமதப் பட்டு வருவதை மத்திய அரசு சுட்டிக் காட்டியது. தற்போது பருவமழைக் காலம் என்பதாலும், காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, குறுவை சாகுபடிக்கு தமிழகம் தயாராக வேண்டும் என்பதாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாக செயல்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், கர்நாடக அரசு ஆணையப் பணிகளை விரும்பவில்லை. இந்த ஆணையத்தால் சாதகமா பாதகமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு, இன்னமும் பிரதிநிதிகளை அறிவிக்கவில்லை. இதனால் மேலும் இந்த விவகாரம் சிக்கலாகும் என்பதை உணர்ந்து, கர்நாடக அரசு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு தனது பிரதிநிதிகளை நியமித்தால் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தை அதன் தற்காலிகத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டுவது குறித்து, தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் செய்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல், இப்போது கர்நாடக அரசை எதிர்க்க விருப்பமில்லாமல், வாய்மூடிக் கிடக்கின்றன.




